Skip to main content

சர்தார் பட ஸ்டைலில் சீக்ரெட்டாக வேலை பார்த்த இளைஞர்; கல்லா கட்டிய பாஜக பிரமுகர்!

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

BJP member who cheated 40 lakhs by claiming to get a job in CBCID

 

தென்காசி மாவட்டம், மலம்பாட்டை ரோடு அருகேயுள்ளது மேலகடைய நல்லூர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா. இவருக்கு பார்த்தசாரதி என்ற மகன் இருக்கிறார். பார்த்தசாரதிக்கு சிறு வயதில் இருந்தே போலீஸ் வேலைக்குப் போகவேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது. ஆனால், எதார்த்த வாழ்வு அவ்வளவு எளிதாக இல்லை. இதனால், ஏதாவது ஒரு வேலை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த பார்த்தசாரதி, சில ஆண்டுகள் வெளி நாட்டில் வேலைசெய்து வந்துள்ளார்.

 

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பார்த்தசாரதி இந்தியா திரும்பியுள்ளார். திரும்பிய உடனே பற்றிக்கொண்டது போலீஸ் வேலை கனவு. எப்படியாவது போலீஸ் உயரதிகாரியாக வேண்டுமென்ற ஆர்வத்தோடு கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாவற்றையும் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது, பார்த்தசாரதியின் அப்பா முத்தையாவிடம் பேசிய சிலர், அண்ணே... உங்க மகனுக்கு வேலை வாங்கனும்னா... நம்ம செங்கோட்டையில் இருக்குற பாஜக நகரச் செயலாளர் பாலகிருஷ்ணனை போய் பாருங்கண்ணே... எனக் கூறியுள்ளனர்.

 

பாஜக பிரமுகர் பாலகிருஷ்ணனை பற்றி விசாரித்த முத்தையாவிற்கு, அவர் மத்திய அரசு தொடர்பான வேலைகளை குறுக்கு வழியில் வாங்கித் தருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தன்னுடைய மகன் பார்த்தசாரதியிடம் பேசியுள்ளார் முத்தையா. அரசு வேலையைப் பற்றி பேசியதும், மிகுந்த மகிழ்ச்சியான பார்த்தசாரதி, தன் அப்பாவிடம், அப்பா... எப்படியாவது இந்த வேலையை வாங்கிடுங்க என ஆவலோடு கூறியுள்ளார். மகனின் ஆசைக்காக எதையும் செய்யலாம் என நினைத்த முத்தையா, தன் மகன் பார்த்தசாரதியோடு பாஜக பாலகிருஷ்ணனை சந்தித்துள்ளார். வேலை வேண்டி தனது அலுவலகத்திற்கு வந்தவர்களிடம் வாய்க்கு வந்தபடி ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார் பாலகிருஷ்ணன்.

 

அப்போது, அவர்களிடம் மேலும் பேசிய பாலகிருஷ்ணன், பையன் நல்ல வாட்ட சாட்டமா இருக்கான்... நான் சொல்றத கேட்டா, போலீஸ் அதிகாரியாக ஆக்கிடலாம் என சாதுரியமாக காய் நகர்த்தியுள்ளார். இதனைக் கேட்ட பார்த்தசாரதி மகிழ்ச்சியில், சார்... நீங்க என்னவேணாலும் சொல்லுங்க சார்... நான் செய்யுறேன் சார்.. என ஆர்வத்துடன் பதிலளித்துள்ளார்.

 

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த பாஜக பாலகிருஷ்ணன், நம்ம தென்காசி மாவட்டத்திலேயே சிபிசிஐடி போலீசாக உன்ன ஆக்க முடியும், ஆனால் அதற்கு நிறைய பணம் செலவு ஆகும் எனப் பேசியிருக்கிறார். சார்... பணத்தைப் பற்றி கவலை இல்லை சார்.. வேலை கன்ஃபார்ம்னா உடனே கொடுக்கலாம் சார்... என பார்த்தசாரதி கூறியுள்ளார்.

 

தொடர்ந்து அவர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், இந்த வேலை ரொம்பவே சீக்ரெட்டான வேலை... நீ வேலைக்கு சேர்ந்ததைக் கூட யாரிடமும் சொல்லக் கூடாது... ரொம்ப சீக்ரெட்டா செயல்படணும், நீ உன்னோட அதிகாரிகளிடம் கூட பேச முடியாது. நீ அனுப்புற ரகசியத் தகவலைக் கூட மெயிலில்தான் அனுப்பணும் என நிறைய விதிமுறைகளை கூறிய பாலகிருஷ்ணன், அதற்காக முதல் கட்டமாக 15 லட்சம் பணம் செலுத்தணும் என்றுள்ளார்.

 

சீக்கிரமே பணத்தோடு வருகிறோம் எனக் கூறி வெளியே வந்த பார்த்தசாரதியும் அவரின் அப்பாவும் அடுத்தடுத்த தினங்களிலேயே 15 லட்சம் ரூபாய் பணத்தினை தயார் செய்துகொண்டு சென்றுள்ளனர். பணத்தினை பெற்றுக்கொண்ட பாஜக பாலகிருஷ்ணன், சில தினங்களில் ஃபோன் பண்றேன் எனக் கூறியிருக்கிறார். அதன் பிறகு, சில தினங்களில் முத்தையாவிற்கு ஃபோன் செய்த பாலகிருஷ்ணன், உங்கள் மகனுக்கு வேலை கன்ஃபார்ம்... ஆனால் ஆர்டர் காப்பிய கையில வாங்கணும்னா... சீக்கிரமே மீதி பணத்தையும் கட்டணும் என மறுபடியும் சில லட்சங்களை வாங்கியுள்ளார். இப்படியே, வேலையைக் காரணம் காட்டி 40 லட்சம் ரூபாய் வரை வாங்கியிருக்கிறார். அதன் பிறகு, போலியான ஆர்டர் காப்பி மற்றும் போலீஸ் யூனிஃபார்ம் என அனைத்தையும் பாலகிருஷ்ணனனே வாரி வழங்கியுள்ளார்.

 

இரகசிய போலீஸ் என்பதால், பார்த்தசாரதியும் இரகசியமாகவே வேலை பார்த்துள்ளார். அவர் இரகசியமாக சேகரிக்கும் அனைத்து தகவல்களையும், பாலகிருஷ்ணன் கொடுத்த மெயில் ஐடிக்கு அனுப்பிக்கொண்டே இருந்துள்ளார். அதற்கு ரிப்ளேவும் வந்துள்ளது. ஆனால் அந்த ரிப்ளே பாலகிருஷ்ணனால் அனுப்பப்பட்டுள்ளது. இப்படியே பல மாதங்கள் வேலை பார்த்து வந்த பார்த்தசாரதிக்கு சம்பளமே வராததால், பாலகிருஷ்ணனிடம் சென்று முறையிட்டுள்ளார். அதற்கும் அசராத பாஜக பாலகிருஷ்ணன், தம்பி... இதுபோல இரகசிய உளவு வேலைகளுக்கு மாதா மாதம் சம்பளம் கொடுக்க மாட்டாங்க.. வருடத்திற்கு ஒரு முறை பல்க் அமவுண்ட்டா 10 லட்சம் 20 லட்சமென்று தருவாங்க... என பொய்களை வாரி கொட்டியுள்ளார்.

 

அதற்கும் பொறுமை காத்து வந்த பார்த்தசாரதி, இன்னும் சில மாதங்களாகியும் சம்பளம் வரவில்லை என்பதால், ஒரு வேளை.. தான் ஏமாற்றப்படுகிறோமோ என சந்தேகிக்க தொடங்கியுள்ளார். அதன்பிறகு அவருக்கு தெரிந்த சில நண்பர்களிடம் இதுகுறித்து பேசியுள்ளார். நண்பர்கள் சிலர், டேய்.. இது ஃபேக்கான ஆர்டர் காப்பிடா... அந்தாளு... உன்ன செம்மயா ஏமாத்திருக்கான்டா... என ஆதங்கப்பட்டுள்ளனர்.

 

இத்தனை நாள் இப்படி ஏமாந்துவிட்டோமே என கண்ணீரோடு வீட்டுக்கு வந்த பர்த்தசாரதி, தனது குடும்பத்தாரிடம் இதுபற்றி கூறியுள்ளார். இதனையெல்லாம் கேட்டு ஆத்திரமடைந்த பார்த்தசாரதி குடும்பத்தார், அனைத்து ஆதாரங்களையும் எடுத்துக்கொண்டு, தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை செய்து வந்த போலீசார், பாஜக பாலகிருஷ்ணன் திட்டமிட்டு இவர்களை ஏமாற்றி இருப்பதை உறுதிப்படுத்திய நிலையில், ஜூன் 20 ஆம் தேதி பாலகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

ஏற்கனவே எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பலரும், பாஜகவில் ரவுடிகளும் ஏமாற்றுப் பேர்வழிகளும் அங்கம் வகித்து வருகின்றனர் எனக் குற்றம்சாட்டி வரும் நிலையில், பாஜகவினர் பலரும் இப்படி வெவ்வேறு வழக்குகளில் கைதாகும் சம்பவம் தொடர்கதையாகி வருவது பாஜக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்