இளைஞர்கள் வேலைவாய்ப்பை பறிக்கும் மத்திய பிஜேபி, மாநில அதிமுக அரசுகளை அகற்றுவதற்கு இளைஞர்கள் அணிதிரள வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது.
வாலிபர் சங்கத்தின் தமிழ் மாநிலக்குழுக் கூட்டம் புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் ரெஜிஸ்குமார் தலைமை வகித்தார். அறிக்கையை முன்வைத்து மாநிலச் செயலாளர் பாலா பேசினார். நிர்வாகிகள் பாலச்சந்திரன், மணிகண்டன், சிவாராமன், கோபிநாத், பிரியசித்ரா, கனகராஜ் உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாநிலக்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசு ஆணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும். நாடுமுழுவதும் மத்திய, மாநில அரசுப் பணிகளில் காலியாக உள்ள சுமார் 24 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ரயில்வே துறையில் நாடுமுழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமாகவும் தமிழகத்தில் 7 ஆயிரத்திற்கும் அதிகமாகவும் காலிப்பணியிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பணியிடங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை உடனடியாக ரத்து செய்வதோடு படித்துவிட்டு வேலையில்லாமல் காத்திருக்கும் இளைஞர்களைக் கொண்டு மேற்படி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் ஆண்டிப்பட்டி, கோட்டூர், சாத்தூர், திருமங்கலம், அருப்புக்கோட்டை, வேடச்சந்தூர் ஆகிய 6 உறுப்புக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்தப் பணியிடங்களில் அரசு மற்றும் அரசு உதிவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்களைக் கொண்டு தொகுப்பூதிய முறையில் பணியமர்த்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் இருக்கும்போது ஓய்வுபெற்றவர்களை பணியமர்த்துவது கடும் கண்டனத்துக்குறியது. எனவே, தற்பொழுது பணியில் உள்ள தகுதியான பேராசிரியர்களில தகுயானவர்களைத் தேர்வுசெய்து மேற்படி முதல்வர் பணியிடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

மத்தில் மோடி தலைமையிலான பிஜேபி அரசும், மாநிலத்தில் அதிமுக அரசும் தொடர்ந்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், தமிழகத்தில் நடைபெற உள்ள 21 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலிலும் மேற்படி அரசுகளை அகற்ற வேண்டியது இளைஞர்களின் கடமையாகும். எனவே, இந்த இரண்டு அரசுகளையும் அகற்றுவதற்கு தமிழக இளைஞகள் அணிதிரள வேண்டுமென வாலிபர் சங்கத்தின் தமிழ்மாநிலக்குழு அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.