Skip to main content

மேலூரில் ஹிஜாப்பை கழற்றச் சொன்ன பாஜக பிரமுகருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

Published on 20/02/2022 | Edited on 20/02/2022

 

bjp

 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த நிலையில், மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியின் 8 ஆவது வார்டில் உள்ள அல்அமீன் பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு பா.ஜ.க. முகவர் கிரிநந்தன் வலியுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

பா.ஜ.க. முகவர் கிரிநந்தன் கூறியதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர், பிற கட்சிகளைச் சேர்ந்த முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, தேர்தல் அலுவலர்கள், தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சிகளின் முகவர்களிடம் பா.ஜ.க. முகவர் கிரிநந்தன் வாக்குவாதம் செய்தார். இதைத் தொடர்ந்து, தேர்தல் அலுவலர்கள், பிற கட்சிகளின் முகவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து கிரிநந்தனை காவல்துறையினர் வாக்கு சாவடியிலிருந்து வெளியேற்றினர்.

 

ஆனால் கிரிநந்தன் மீண்டும் வாக்கு சாவடிக்கு சென்று சண்டையிட முயன்றதையடுத்து, காவல்துறையினர் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே வாக்குச்சாவடி செயல் அலுவலர் நேதாஜி, கிரிநந்தன் மீது காவல்துறையிடம் புகாரளித்தார். இதனையடுத்து வாக்குச்சாவடி செயல் அலுவலரின் புகாரின் அடிப்படையில், கிரிநந்தன் மீது மத உணர்வை புண்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரை  மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிரிநந்தனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்