Skip to main content

பீகார் தொழிலாளர்கள் தாக்கி சூப்பர்வைசர் பலி!

Published on 03/01/2023 | Edited on 03/01/2023

 

bihar labour versus supervisor issue in cuddalore sipcot 

 

அதிக வேலை செய்ய நிர்பந்தித்ததால் ஆத்திரமடைந்த 4 பீகார் தொழிலாளர்கள் தாக்கியதில் அதே மாநிலத்தைச் சேர்ந்த சூப்பர்வைசர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கடலூர் சிப்காட்டில் ஏராளமான ரசாயனத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ரசாயனத் தொழிற்சாலைகளில் வடமாநிலத் தொழிலாளர்களும், தமிழகத் தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். கடலூர் சிப்காட் குடிகாடு பகுதியில் இயங்கி வரும் ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் 30-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இரண்டாவது ஷிப்ட் பணி முடிந்து வடமாநில ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொழிற்சாலையில் இருந்து தங்களது இருப்பிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு மர்ம கும்பல் இவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. கையில் மரக்கட்டைகளைக் கொண்டு இந்தக் கொடூரத் தாக்குதல் நடைபெற்றது. இந்தக் கொடூரத் தாக்குதலில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய்குமார் (வயது 43), அதே மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சிங் (32) ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சஞ்சய்குமாரை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து பலத்த காயமடைந்த சஞ்சய் சிங்குக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இது குறித்து தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே, அந்தப் பகுதியில் பதிவாகியுள்ள சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, அதே தொழிற்சாலையில் பணிபுரியும் நான்கு பீகார் மாநிலத் தொழிலாளர்கள் கையில் தடிகளுடன் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள்தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

 

அதையடுத்து ராஜேந்தர் சவுத்ரி, ரவீந்தர் சவுத்ரி, சுனில்குமார், சோனுகுமார் ஆகிய 4 பேரை கடலூர் முதுநகர் போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட சஞ்சய்குமார் அந்தத் தொழிற்சாலையில் கண்காணிப்பாளராக இருந்து வந்த நிலையில், இவர்களுக்கு அதிக வேலைகளை வழங்கியதாகவும், கடினமான பணி உள்ள பகுதியில் பணி வழங்கி வந்ததாகவும், அதனால் முன்விரோதம் ஏற்பட்டதாகவும், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தொழிற்சாலையில் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், தமிழகத் தொழிலாளர்களைக் கொண்டு தங்களைத் தாக்கப் போவதாக அவர் தெரிவித்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்து அவர்களைத் தாக்கியதும் தெரியவந்தது. இந்தத் தாக்குதலில் சஞ்சய் குமார் உயிரிழந்த நிலையில், சஞ்சய் சிங்குக்கு தொடர்ந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்