சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று (11/01/2021) அதிகாலை 4 மணிக்கு ரோஸ் பெண்கள் விடுதி அருகே உள்ள சாலையில் இருந்து, அதே பகுதியில் உள்ள இரட்டை குளத்திற்குப் பெரும் முதலை ஒன்று சென்றுள்ளது. இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்து அதிர்ச்சியில் கூச்சலிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர், இதுகுறித்து மற்ற நண்பர்கள் மற்றும் பொது மக்களுக்கு தகவல் கொடுத்தார். இதனையறிந்து, அரை மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட இடத்தில் பொதுமக்களின் கூட்டம் அதிகமானது. இதனைத் தொடர்ந்து முதலையைப் பார்த்த பொதுமக்கள், அந்த இடத்தில் இருந்த குச்சிகளையும், புற்களையும் முதலை கண் மீது போட்டனர். இதனால் முதலை நகராமல் அப்படியே படுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முதலையை லாவகமாக பிடித்து கை, கால்களைக் கயிற்றால் கட்டி, பொதுமக்களின் உதவியுடன் சிதம்பரம் அருகே உள்ள வக்காராமரி ஏரியில் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதேபோல், சிதம்பரம் பகுதியில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் கொள்ளிடம், பழைய கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் இருந்து சிதம்பரம் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் முதலைகள் தஞ்சமடைந்துள்ளன. இவை அவ்வப்போது வெளியே வந்து பொதுமக்களை மிரட்டி வருகிறது. தற்போது ஒரு முதலை பிடிபட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நிம்மதி பெருமூச்சு ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இதுபோல் பல நீர்நிலைகளில் முதலை இருப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். அதனையும் பிடிக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.