
மகாகவி பாரதியார், பிறந்த நாளான டிசம்பர் 11ஆம் நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாகத் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாகவி பாரதியாரின் 143வது பிறந்த நாள் விழா இன்று (11.12.2024) அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை, மெரினா கடற்கரை. காமராஜர் சாலையில் அமைந்துள்ள பாரதியார் உருவச்சிலைக்கு, தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் சென்னை மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் மாலை அணிவித்தும், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உய்வகை காட்டும் உயர் தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்!. தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன். மொழி - நாடு - பெண் விடுதலை - பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாகவி பாரதியாரின் நினைவுகளைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாகச் செப்டம்பர் 11 ஆம் நாள் ஆண்டுதோறும் மகாகவி நாள் எனக் கடைப்பிடிக்கப்படும் என 10.9.2021 அன்று அறிவித்து நடைமுறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரதியார் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழா கொண்டாட்டத்தின் போது, பாரதியாரின் சிலையைத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பல்லக்கில் வைத்துத் தூக்கிச் சென்றார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆளுநர் ரவி, சென்னை ஆளுநர் மாளிகையில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143வது பிறந்தநாளில் அவரது தீவிர பற்றாளர்களுடன் சேர்ந்து பாரதியின் ஜதி பல்லக்கு ஊர்வலத்தைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்த ஜதி பல்லக்கு, மகாகவி பாரதியாரின் நினைவு இல்லத்துக்குச் சென்றதும் அவருக்கு மரியாதை செலுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.