மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் பாரதி விழா மற்றும் உலக அறிவியல் நாள் 2024 ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அண்மையில் நடைபெற்றது. பேரவையின் ஜப்பான் கிளையின் ஆலோசகர் ச.கமலக்கண்ணன் வரவேற்றார். பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் இணையவழியில் விழா அறிமுகவுரை நிகழ்த்தினார். சென்னை பல்கலைக்கழக தமிழ்மொழி துறைத் தலைவர் பேராசிரியர் ய.மணிகண்டன் எழுதிய பாரதியும் ஜப்பானும் நூல் வெளியிடப்பட்டது.
சிறப்பு விருந்தினர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நூலை வெளியிட, ஜப்பான் வாழ் இலக்கியவாதிகள் கு. கோவிந்தராஜன், ரா. செந்தில்குமார் ஆகியோர் முதல்படியைப் பெற்றுக்கொண்டனர். பேராசிரியர் ய. மணிகண்டன் பாரதி குறித்துச் சிறப்புரையாற்றினார். நிகழ்வை முன்னிட்டு பாரதி வேடமணிந்த குழந்தைகள் பாரதியின் படத்தை ஏந்தி முன்னேவரக் குழந்தைகள், பெரியவர்கள் எனச் சுமார் 30 பேர் பங்கேற்ற பாரதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் பங்கேற்ற குழந்தைகளுக்குச் சான்றிதழும் பாரதி குறித்த நூலும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற 25 ஜப்பான் வாழ் தமிழர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஒவ்வொருவரின் ஆய்வுத் தளங்களை எடுத்துரைத்து, அவர்களின் உருவப்படத்தையும், பெயரையும், ஆய்வின் தலைப்பையும் பொறித்த பதக்கத்தை மயில்சாமி அண்ணாதுரை வழங்கினார். பேரவையின் ஜப்பான் கிளை தலைவர் வே.கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.