தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மே 24 முதல் ஜூன் 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து ஊரடங்கை நீட்டிப்பதா என்பது குறித்து தமிழ்நாடு முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்துடன் நேற்று (03.06.2021) தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், அரசு அதிகாரிகளும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் அதிகாரிகளும் பங்கேற்றனர். ஏற்கனவே செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு ஆலையில் மருந்து பொருட்களை உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விரைவாக அதுகுறித்து முடிவெடுக்கப்படும், செயல்பாட்டுக்குவரும் என நம்பப்படுகிற நிலையில், நேற்று இந்த ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தில் பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். தடுப்பூசி உற்பத்திக்கான கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பாரத் பயோடெக் நிறுவன மேலாண் இயக்குநர் சுஜித்ரா இலா தலைமையில் இந்த ஆய்வு நடைபெறுகிறது.