![Banner Dispute; Homes looted ..!](http://image.nakkheeran.in/cdn/farfuture/QX3Hcb7hm8Ilo1sJa7oHSw1LY9ZhT9w19tfO6P96HEQ/1624864986/sites/default/files/inline-images/th-1_1225.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இறையூர் கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராஜி என்பவரின் வீட்டுத் திருமணம் நடைபெற்றது. இதில் பேனர் வைப்பது சம்பந்தமாக அதே பகுதியைச் சேர்ந்த ஜெய்சன், அலெக்சாண்டர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (26.06.2021) இரவு ஊர் பகுதியில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த அலெக்சாண்டர் தரப்பைச் சேர்ந்தவர்கள் மீது இரும்பு குழாய் மற்றும் உருட்டுக் கட்டைகளால் ஜெய்சன் தரப்பினர் தாக்கியுள்ளனர். இதில், ஃப்ராங்கிளின், ரிச்சர்ட், ஜான், அந்தோணி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், நேற்று மதியம் அலெக்ஸாண்டர் தரப்பினர் 20க்கும் மேற்பட்டோர் ஒன்றுசேர்ந்து, பயங்கர ஆயுதங்களுடன் ஜெய்சன் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அந்த வீட்டில் யாரும் இல்லாததால் அவரது வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஜெய்சனுக்கு சொந்தமான விவசாய டிராக்டருக்கு தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். மேலும், அவரது ஆதரவாளர்கள் மூன்று பேரின் வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து சென்றுள்ளது.
இதுகுறித்த தகவலை, கிராம மக்கள் போலீசாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மணிமொழியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூறையாடப்பட்ட வீடுகள், தீ வைத்து எரிக்கப்பட்ட விவசாய டிராக்டர் ஆகியவற்றைப் பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள இரு தரப்பினரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். தொடர்ந்து இறையூர் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த ஊரில் ஏற்பட்ட கலவரத்தின்போது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, போலீசார் முன்னெச்சரிக்கையாக ஊரில் அமைதி நிலவ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.