வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதால், வரி செலுத்துவோரின் வசதிக்காக இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் திறந்திருக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
2017-18 நடப்பு நிதியாண்டு இன்றுடன் நிறைவடைகிறது. நிதியாண்டு 2016-17, 2017-18 ஆகியவற்றுக்கான வருமானவரி ரிட்டன்கள், 2016-17-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட ரிட்டன்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இன்று மாலைக்குள் வரி செலுத்துவோர் வருமான வரி ரிட்டன்களை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக வருமான வரி அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக, இன்று அனைத்து வங்கிகளும் இரவு 8 மணி வரை செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், எலக்ட்ரானில் பணபரிமாற்றங்கள் இன்று நள்ளிரவு வரை ஏற்றுக் கொள்ளப்படும்.
ஏப்ரல் 1 மற்றும் 2 தேதிகள் விடுமுறை என்பதால் வாடிக்கையாளர்களின் சிரமத்தை குறைப்பதற்காக இன்று இரவு 8 மணி வரை வங்கிகளை திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.