
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டீ.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சடையாண்டி என்பவரது மகன் அண்ணாதுரை (வயது 40). அதே ஊரில் செயல்பட்டுவரும் இந்தியன் வங்கியில் மேலாளராக பணி செய்துவருபவர் பத்மநாபன்.
இந்நிலையில் வங்கிக்குச் சென்ற அண்ணாதுரை, மேலாளர் பத்மநாபனிடம் தனது வங்கிக் கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது என்று கணினியில் பார்த்துச் சொல்லுமாறு கேட்டுள்ளார். அப்போது அவரது கணக்கைக் கணினியில் ஆய்வுசெய்த வங்கி மேலாளர், அண்ணாதுரையிடம் தங்களின் கணக்கில் பணம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அண்ணாதுரை, “என் கணக்கில் பணம் இல்லை என்று எப்படி சொல்லலாம்” என மேலாளர் மற்றும் அங்கிருந்த ஊழியர்களை ஆபாசமாகவும் அருவருப்பாகவும் திட்டியுள்ளார். அப்போது வங்கி மேலாளர் மற்றும் அங்கிருந்த ஊழியர் சம்பந்தம் ஆகியோர், “ஏன் இப்படி அநாகரிகமா பேசுகிறீர்கள்? கணக்கில் உள்ளதுதானே சொல்ல முடியும். பணம் இருந்தால் இருக்கு என்று சொல்லுவோம், இல்லை என்றால் இல்லை என்றுதானே சொல்ல முடியும்” என்று கூறியுள்ளனர்.
அப்போது அவர்கள் இருவர் மீதும் அண்ணாதுரை தாக்குதல் நடத்தி மிரட்டல் விடுத்துள்ளார். இதில் வங்கி மேலாளர் பத்மநாபன் நிலைகுலைந்து போனார். இதுகுறித்து உடனே வங்கி மேலாளர் பத்மநாபன், திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் பழனி, வழக்குப் பதிவுசெய்து வங்கி மேலாளர், வங்கி ஊழியர் ஆகிய இருவர் மீதும் தாக்குதல் நடத்திய அண்ணாதுரையை கைதுசெய்து சிறைக்கு அனுப்பியுள்ளார். இந்தச் சம்பவத்தால் வங்கியில் கூடியிருந்த மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வங்கி மேலாளரைத் தாக்கிய வாடிக்கையாளரின் செயல் வங்கி ஊழியர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.