கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தனியார் வங்கி நகை மதிப்பீட்டாளர் மனைவி, மகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை அடுத்த புலியூர் குறிச்சியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளர் பொறுப்பில் உள்ளார். புலியூர் குறிச்சியில் தனது மனைவி ரோகிணி, மகள் அர்ச்சனா உடன் ரமேஷ் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவரது உறவினர் ஒருவர் ரமேஷை செல்போனில் தொடர்புகொள்ள முற்பட்டபொழுது அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் வீட்டிற்கே சென்று அவரை பார்க்க முயன்றபொழுது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. வெகு நேரமாக காத்திருந்தும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த உறவினர் தக்கலை போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் மின்விசிறியில் ரமேஷ் அவரது மனைவி ரோகிணி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர். வேறொரு அறையில் மகள் அர்ச்சனா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனே மூன்றுபேரின் சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் அவர்களது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த தற்கொலை சம்பந்தமாக கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ள போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். தனியார் வங்கி நகை மதிப்பீட்டாளர் மனைவி, மகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.