ஒடிசா மாநிலத்தில் இருந்து ஹவுரா விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த இளைஞர் ஒருவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ரயிலில் வந்து கொண்டிருந்தபோது, ரயிலில் டிக்கெட் பரிசோதகர் வருவதை அறிந்து உடனடியாக ஆம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி ரயில் நிலைய வாயிலில் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்திருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார், தற்காலிகப் பேருந்து நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரயில் நிலைய வாயிலில் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகிக்கும் வகையில் பையுடன் நின்றிருந்தவரைப் பிடித்து அவர் வைத்திருந்த பையைச் சோதனை மேற்கொண்டதில், பையில் கஞ்சா மற்றும் போதை சாக்லேட்டுகள் இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த இளைஞரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த அணில் குமார் என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் 350 கிராம் போதை சாக்லேட்டுகளைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர், கஞ்சா கடத்தி வந்த அணில் குமாரைக் கைது செய்து அவர் கடத்தி வந்த ஒரு கிலோ கஞ்சா மற்றும் 350 கிராம் மதிப்பிலான போதை சாக்லேட்டுகளைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.