எடப்பாடி பழனிசாமி வீட்டு முன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தில் தீவிரமாக பெய்து வருவதால், காவிரியில் தற்போது ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரை சேமித்து வைக்க தமிழக அரசு திட்டமிட வேண்டும். ஏரி, குளங்கள் அனைத்தையும் தூர்வார வேண்டும். ஒரு சொட்டு தண்ணீரை கூட வீணாக கடலில் கலக்க விடக்கூடாது.
சேலத்தில் இருந்து சென்னைக்கு ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 4 வழிச்சாலையை தரம் உயர்த்தலாம். அல்லது வெளிநாடுகளில் இருப்பது போல் விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் பறக்கும் சாலை அமைத்து திட்டத்தை நிறைவேற்றலாம். சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த திட்டத்தை ஒட்டுமொத்தமாக கைவிட வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலம், மலைகள் ஆகியவை இதன் மூலம் அழிக்கப்பட்டு விடும்.
இதுதொடர்பாக இம்மாத இறுதிக்குள் தமிழக அரசு ஏதாவது ஒரு அறிவிப்பினை வெளியிட வேண்டும். இல்லை என்றால் சேலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி, ஆகஸ்டு முதல் வாரம் சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டு முன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் கோவணம் கட்டிக்கொண்டு, கையில் மண்சட்டி ஏந்தியபடி நிற்பார்கள் என்றார்.