வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு முகாம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி,வருவாய் துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் விஸ்வநாதன், தீயணைப்பு மற்றும் மீட்பு குழு பொறுப்பு ஆணையர் சைலேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய வருவாய் துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறும்போது,
"பேரிடர் காலங்களில் ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் அரசினால் எடுக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறுகள் இருந்தால் அவற்றை மூடுவதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
மேலும் இந்த பருவமழையில் வெள்ள பாதிப்பு இல்லாமலும், பேரிடர் காலங்களில் விபத்தில்லா மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும். ஆழ்த்துளை கிணறு மூடப்பட்டிருந்தால் சுர்ஜித் உயிரிழந்திருக்கமாட்டான். அரசு என்ன வேலை செய்தது என அங்குள்ள மக்களின் மனங்களுக்கு தெரியும் என்றும், இனி ஒரு உயிரிழப்பு ஆழ்த்துளை குழாயிலோ நீர் நிலை விபத்துகள், பேரிடர் ஆபத்துகளாளோ நிகழக்கூடாது என்பதே நமது கடமையாக நினைத்து செயல்பட வேண்டும்" என்றார்.