சென்னை ஆவடி அருகே நிச்சயதார்த்தம் முடிந்த ஜோடி செல்பி மோகத்தில் கிணற்றில் தவறி விழுந்ததில், இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் இரு வீட்டாரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. சென்னை பட்டாபிராம், நவஜீவன் நகரை சேர்ந்தவர் அப்பு, இவருக்கு வயது 24. அதே பகுதி, காந்தி நகரை சேர்ந்த மெர்சி. இவருக்கு வயது 23. இருவரும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இருவருக்கும், செப்.,30ல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் வெல்லஞ்சேரி அருகே உள்ள விவசாய நிலத்தில் இருந்த கிணற்றிற்கு அருகே நின்று செல்பி எடுக்க முயன்ற போது நிலைத்தடுமாறி மெர்சி ஸ்டெஃபி கிணற்றில் விழுந்துவிட்டார். அவரை காப்பாற்ற முயன்ற போது அப்புவும் கிணற்றுக்குள் விழுந்தார். இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் அப்பு சத்தம் போட்டுள்ளார். அவரது குரல் கேட்டு வந்த நில உரிமையாளர் சடகோபன், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அப்புவை போராடி மீட்டுள்ளார். ஆனால் மெர்சியை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சைக்கு பின்னர் நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினரிடம், அப்பு அளித்துள்ள வாக்கு மூலத்தில் கிணற்றுக்குள் இறங்கி கடைசி படிக்கட்டில் நின்று செல்பி எடுக்க தூண்டியது மெர்சி தான் என்றும் சரவணன் மீனாட்சி தொலைக்காட்சி தொடரில் வருவது போல செய்ய முயன்றதால் கிணற்றுக்குள் விழுந்த விபரீதம் நிகழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். நீச்சல் தெரியாத தன்னை வேகமாக காப்பாற்றியது போல, யாராவது கிணற்றுக்குள் குதித்து மெர்சியையும் காப்பாற்றி இருக்கலாம் என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், காவல் துறையினரும் கூறி வருகின்றனர்.