Skip to main content

நள்ளிரவில் கோவில்களை திறந்து வைக்க தடைவிதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் அவசரமனு தாக்கல்!

Published on 27/12/2017 | Edited on 27/12/2017
நள்ளிரவில் கோவில்களை திறந்து வைக்க தடைவிதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் அவசரமனு தாக்கல்!

ஆங்கில புத்தாண்டு தினத்துக்காக டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் இந்து கோவில்களை திறந்து வைக்க தடை விதிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆகம சாஸ்திரத்தின்படி, இரவு 9 மணிக்குள் அர்த்தஜாம பூஜையை முடித்து நடையை அடைத்துவிட்டு, காலை 4.30 முதல் 6 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் கோவில் நடையை திறக்க வேண்டும் என்ற நடைமுறையை மாற்றி புத்தாண்டுக்கு கோவில்கள் திறப்பதை எதிர்த்து வழக்கறிஞர் அஸ்வத்தாமன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இரவு நேரங்களில் காற்றில் பிராணவாயுவின் அளவு குறைவாக இருக்கும் என்பதால் மூதாதையர்கள் இந்த நடைமுறையை பின்பற்றிவந்ததாகவும், அதனடிப்படையில் புத்தாண்டு தரிசனத்துக்காக நள்ளிரவில் இந்து சமய கோவில்களை திறந்துவைக்க தடை விதிக்க இந்துசமய அறநிலையத்துறை செயலாளருக்கும், அறநிலையத்துறை ஆணையருக்கும் உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆகம விதிகளின்படி சைவ கோவில்கள் சிவராத்திரிக்கும், வைணவ கோவில்கள் வைகுண்ட ஏகாதசிக்கும் மட்டுமே திறந்திருக்க வேண்டும் என ஆகம முறைகளை வகுக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இரவில் கோவில்களை திறந்து வைக்கக்கூடாது என ஆந்திர அரசு பிறப்பித்துள்ள உத்தரவைச் சுட்டிக் காட்டி அதுபோல தமிழகத்தில் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நாளை, கிறிஸ்துமஸ் விடுமுறை கால அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

- சி.ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்