சென்னை புறநகர் பகுதியில் அவ்வப்போது ஆட்டோ மற்றும் பைக் ரேஸ் நடத்தும் கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக நேற்று காலை ஆட்டோ ரேஸ் நடத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள ஜானகி புறத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் உள்ள மடப்பட்டு வரை சுமார் 20 கிலோமீட்டர் தூரம்வரை இந்த ஆட்டோ ரேஸ் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ ரேஸ் பந்தயத்தில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை, வியாசர்பாடி உட்பட பல பகுதிகளைச் சேர்ந்த 4 ஆட்டோக்களும் விழுப்புரத்தை சேர்ந்த ஒரு ஆட்டோ என மொத்தம் 5 ஆட்டோக்கள் இந்த பந்தயத்தில் பங்கேற்றுள்ளன.
இந்த ஆட்டோ ரேஸ் பந்தயம் குறித்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், பந்தய ஆட்டோ ஓட்டுநர்களை இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் உற்சாகப்படுத்தி சென்றுள்ளனர். இந்த பந்தயத்தில் முதலிடம் பிடித்த சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கியுள்ளனர்.
ஆட்டோ ரேஸ் நடத்துவதற்கு அரசு ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி தமிழகத்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விழுப்புரம் பகுதியில் ஆட்டோ ரேஸ் பந்தயம் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், விழுப்புரம் போலீசார் ஆட்டோ ரேஸ் நடத்தியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி நேற்று ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்து உள்ளனர். மேலும், ரேஸில் பங்கேற்றவர்களையும், ஆட்டோக்களையும் விரைவில் பிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.