தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 13- ஆம் தேதி அன்று காலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது. அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை முதன் முறையாக தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 14- ஆம் தேதி வேளாண்மைத்துறைக்கென்று தனி பட்ஜெட்டையும் நிதியமைச்சர் தாக்கல் செய்யவுள்ளார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் இடம் பெறக் கூடிய அறிவிப்புகள் குறித்து தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தி.மு.க. கட்சியின் கொறடா கோவி.செழியன் இன்று (08/08/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆகஸ்ட் 13- ஆம் தேதி அன்று மாலை 05.00 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க.வின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும்" என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.