கள்ளச்சாராயக் கும்பலுடன் கூட்டணி வைத்துக்கொண்டு குற்றத்தடுப்பு நடவடிக்கையில் கோட்டைவிட்டதாக வந்த புகாரின்பேரில், ஆத்தூர் மதுவிலக்குக் காவல்துறையினரை, ஒட்டுமொத்தமாக, ஒரே நாளில் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, சேலம் மாவட்ட எஸ்.பி தீபா கனிகர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில், ஆத்தூர், மேட்டூர், இரும்பாலை ஆகிய இடங்களில் மதுவிலக்குப்பிரிவு காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இதற்கென தனியாக ஒரு டி.எஸ்.பி, 3 காவல் ஆய்வாளர்கள், எஸ்.ஐ., தலைமைக் காவலர்கள் என 100 பேர் பணியாற்றுகின்றனர். தற்போது டி.எஸ்.பி பணியிடம் மட்டும் காலியாக உள்ளது.
சேலம் மாவட்டத்திற்குள் கள்ளச்சாராயம், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுவது மீண்டும் வேகமெடுத்துள்ளது. மாவட்டத்தின் இதர பகுதிகளைக் காட்டிலும் ஆத்தூர் சுற்று வட்டாரங்களில், பாக்கெட் சாராயம் விற்பனை தலைவிரித்தாடுகிறது. கள்ளச்சாராயக் கும்பல், பெரும்பாலும் ஆத்தூர் கல்வராயன் மலைப்பகுதியை, சாராயம் காய்ச்சும் தளமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
கரோனா ஊரடங்கு காலத்தில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. அப்போது, ஆத்தூர் சுற்றுவட்டாரங்களில் மட்டும் அதிகளவு கள்ளச்சாராயம் விற்பனை கொடிகட்டிப் பறந்தது. எஸ்.பி. தீபா கனிகர், கள்ளச்சாராயக் கும்பலை பிடிக்க, தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அப்போது, நடந்த தொடர் நடவடிக்கையால், 50க்கும் மேற்பட்டோர், கைது செய்யப்பட்டனர். சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டன.
மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட பிறகும்கூட, ஆத்தூர் சுற்று வட்டாரங்களில் பாக்கெட் சாராயம் விற்பனை கரை புரண்டு ஓடுகிறது. சாராயக் கும்பல், மதுவிலக்குப் பிரிவு காவல்துறையினரை கைக்குள் போட்டுக்கொண்டு தங்கள் சாம்ராஜ்யத்தைத் தொடர்வது தெரியவந்தது.
மதுவிலக்கு காவல்துறையினர், சாராயக் கும்பலுடன் சேர்ந்துகொண்டு மாமூல் மழையில் நனைவதை ரகசிய விசாரணையில் எஸ்.பி.யும் உறுதி செய்துகொண்டார்.
இதையடுத்து, மதுவிலக்குப் பிரிவில் பணியாற்றி வந்த சிறப்பு எஸ்.ஐ.க்கள், தலைமைக் காவலர்கள் என 17 பேரை ஒரே நாளில் அதிரடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
மாற்றப்பட்டவர்களில் தலைமைக் காவலர்கள் பூபதி, மணிமாறன், முனிராசன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பத்து பேர் உடனடியாக வியாழக்கிழமை (நவ. 5) ஆயுதப்படைக்கு வந்து சேர்ந்தனர். மற்றவர்கள் விரைவில் ஆயுதப்படைக்கு வந்து சேர்வார்கள் எனத் தெரிகிறது.
ஆத்தூர் மதுவிலக்குப் பிரிவில் பணியாற்றிவந்த அனைத்துக் காவலர்களும் லஞ்சம் பெற்றுக்கொண்டு குற்றத்தடுப்பு நடவடிக்கையில், அலட்சியமாகச் செயல்பட்ட புகாரின்பேரில் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.