தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழ்நாடு மற்றும் பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பெயர்களை புறக்கணித்ததோடு, சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இது தமிழக அரசியலில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆளுநரின் பொங்கல் பண்டிகை தேநீர் விருந்து அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் முத்திரையை புறக்கணித்துவிட்டு ஒன்றிய அரசின் சின்னத்தை அச்சிட்டிருப்பதோடு, தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு எதிராக ஆளுநரின் இந்த தொடர் நடவடிக்கை அரசியல் கட்சியினர், மாணவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆங்காங்கே ஆளுநருக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றது.
இந்நிலையில் ஈரோட்டில் பன்னீர்செல்வம் பார்க்கில் தலைவர்களின் சிலைக்கு முன்பாக ஆளுநரின் கொடும்பாவி எரிக்கப்படும் என்ற தகவலையடுத்து நேற்று முதல் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல இன்று 2வது நாளாக ஈரோடு காளை சிலை அருகில் ஆளுநரின் கொடும்பாவி எரிக்கும் போராட்டம் நடைபெறும் என்று சில அமைப்புகள் தெரிவித்துள்ளதால் மேலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் ஒவ்வொரு கல்லூரிகள் முன்பாகவும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு அருகே இன்று 12ந் தேதி ஆதித்தமிழர் பேரவையினர் ஆளுநர் உருவபொம்மையை எரிப்பதாக அறிவித்திருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆதித்தமிழர் பேரவையின் தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் 50 நிர்வாகிகள் திரண்டு வந்து ஆளுநர் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதனை பறித்தனர். இதனையடுத்து ஆளுநர் படத்தையும் அவர்கள் எரிக்க முயன்ற போது போலீசார் அதை தடுத்து ஆதித்தமிழர் பேரவையின் நிர்வாகிகளை கைது செய்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.