விழுப்புரம் மாவட்டம், செஞ்சி டி.எஸ்.பி அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வருபவர் பத்மாவதி. இவர், நேற்று விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் செல்வதற்காக செஞ்சி பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தனியார் பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார். அவர் அமர்ந்த இருக்கையில் ஏற்கனவே அமர்ந்திருந்த ஒரு பெண்மணி தன் கைப்பையை அடையாளத்துக்கு வைத்துவிட்டு தண்ணீர் குடிக்கச் சென்றுள்ளார். தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் பேருந்தில் ஏறி தன் இருக்கையில் அமர சென்றபோது, அதில் வேறு ஒரு பெண் அமர்ந்திருந்ததைக் கண்டு கோபமடைந்த அந்த பெண், இதைத் தட்டி கேட்டுள்ளார்.
இதில் பத்மாவதிக்கும் அந்தப் பெண்ணுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த அந்தப் பெண், பத்மாவதியை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பத்மாவதி செஞ்சி போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் அந்த பெண்மணியை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அதில், அவர் பண்ருட்டியை சேர்ந்த சவுந்தர்யா என்பதும், மேல்மலையனூர் கோவிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு பேருந்தில் வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. சௌந்தர்யாவைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.