
சென்னையில் 11 வயது சிறுமி ஒருவர் பலரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சென்னையில் சிறுவர்கள் உட்பட பதினாறு பேர் 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் அண்ணன் முறை கொண்ட சிறுவன், அவனது நண்பன் மற்றும் டெய்லர் ஒருவர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மதுவுக்கு அடிமையானதால் சிறுமிக்கு நேர்மை இந்த கொடுமையை அவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர்.
ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமையை அனுபவித்து வந்த சிறுமி கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவருக்கு நேர்ந்த கொடுமை சித்தி மூலம் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவருடைய பாட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணையில் பாலியல் வன்கொடுமை செய்த பலர் பசியை காரணம் காட்டி தின்பண்டங்களை சிறுமிக்கு வாங்கிக்கொடுத்து ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது வரை மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்ட சிறுமியிடம் மேலும் வேறு யாரேனும் தவறாக நடந்து கொண்டனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அண்மையில் பள்ளி மாணவிகள், ஒரு கும்பலால் பாலியல் தொழிலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது சிறுமி ஒருவர் பல பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.