விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகரில் உள்ளது காந்தி பஜார். இங்கு ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நேற்று முன்தினம் 1:30 மணி அளவில் முகத்தை முழுவதும் துணியால் மூடி கட்டிக்கொண்டு ஒரு மர்மநபர் நுழைந்துள்ளார். அந்த மர்ம நபர் அங்கிருந்த லைட்டை எல்லாம் நிறுத்தி விட்டு, தான் கொண்டுவந்திருந்த இரும்பு கம்பியால் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது அங்கிருந்த அலாரம் அடித்துள்ளது. ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து அலாரம் சத்தம் வந்ததை அடுத்து பொதுமக்களிடம் மாட்டிக்கொள்வோம் என்று பயந்துபோன அந்த திருடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதே மர்ம நபர் கடந்த 12ஆம் தேதி இரவும் இதே ஏ.டி.எம் மையத்தில் திருட முயற்சி செய்துள்ளார். அப்போதும் இதே போன்று ஏ.டி.எம்.ல் இருந்த அலாரம் அடித்ததால் தப்பி ஓடியுள்ளார்.
சென்னையிலுள்ள இந்த ஏ.டி.எம். தலைமை மையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் செஞ்சி ஏ.டி.எம்.ல் திருட்டு முயற்சியை தெரிந்துகொள்ளும் தொழில்நுட்பம் மூலம் கண்டறியும் வசதி இருந்துள்ளது. அதன் மூலம் ஏ.டி.எம். மையத்தில் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி செய்வதை அங்கிருந்து கண்டறிந்து செஞ்சியில் உள்ள கிளை மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
செஞ்சி கிளைமேலாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கிளை மேலாளர் போலீசில் புகார் அளித்ததின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். மெஷினை உடைக்க முயன்ற அந்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.