“தமிழை ஆண்டாள் கட்டுரையை நீதிமன்றம் தடை செய்ய வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும். இனி எந்த மேடையிலும் யாரும் அப்படி பேசக்கூடாது. கிறிஸ்தவ மதத்தையும் சரி.. இஸ்லாமிய மதத்தையும் சரி.. எந்த மதத்தையும் யாரும் இழிவாகப் பேசக்கூடாது.” என்று கடந்த ஆண்டு உண்ணாவிரதம் இருந்தபோது ‘வாய்ஸ்’ கொடுத்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர், ஒராண்டு கழித்து அத்திவரதருக்காக மீண்டும் குரல் கொடுத்திருக்கிறார்.
“இதே அத்திவரத பெருமாள் ஸ்ரீகிருஷ்ணபிரேமி அன்னா சுவாமிகளிடம் உற்சவம் ஆரம்பித்த புதிதில் மறுபடியும் என்னைச் சேற்றில் புதைக்கப் போகிறாயா? என்னைப் புதைக்க வேண்டாம் என்று அவருடைய கனவில் தோன்றி அழுததாக கிருஷ்ணபிரேமி அன்னா கண்ணீருடன் கூறினார் என்னிடம். இதை நாங்கள் தமிழக முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் அறநிலையத்துறை அமைச்சரிடமும் மற்றும் அனைத்து அமைச்சர்களிடமும் நமது நாடு நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக ஸ்ரீகிருஷ்ணபிரேமி அன்னா அவர்களின் முடிவைக் கூறியுள்ளோம்.
சேற்றிலும் தண்ணியிலும் பகவான் ஏன் கஷ்டப்பட வேண்டும்? இத்தனை ஆண்டுகளாக பூஜை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அவரை அதே இடத்தில் வைத்து சேவிப்பதற்கு.. பொதுமக்கள்.. லட்சோபலட்சம் மக்கள் இப்போது வந்து கொண்டிருக்கிறார்கள். காஞ்சிபுரம்கூட மறுபடியும் திருப்பதி ஆகிவிடும். அதனால், தயவுசெய்து இந்த விக்கிரகத்தை புதைக்க வேண்டாம். இப்போதைக்கு அப்படியேகூட வச்சிக்கலாம். ஏன்னா.. இத்தனை வருஷமா பூஜை பண்ணல. ஆனா.. ஒரு பவர் உண்டு. அந்தப் பவர் இருக்கிறதுனாலதான்.. ஆகர்ஷ சக்தி இருக்கிறதுனாலதான் இத்தனை மக்கள் அவரைத் தேடி வந்துக்கிட்டிருக்காங்க. ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறதுனால.. வரம் தரக்கூடிய அத்திவரதரை தேடி வருகிறார்கள். அத்திவரதரை வெளியே எடுத்ததுனாலதான்.. அங்கங்கே மழை பெய்யுது. இன்னும் நிறைய மழை பெய்ய வாய்ப்பு இருக்குது.
அத்திவரதர் 48 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் மேலே எழுந்திருக்கிறார். இது ஆகமத்திலோ, சாஸ்திரங்களிலோ கிடையாது. இந்த அத்திவரதர்தான், ஆதிகாலத்தில் ஆதிசங்கரருடன் பேசியிருக்கிறார். இதே மூர்த்திதான் ராமானுஜருடன் பேசியிருக்கிறார். தேசிகரிடமும் பேசியிருக்கிறார். அந்தக் காலக்கட்டத்தில், திருட்டு பயம் இருந்தது. விக்கிரகங்களை ஆங்காங்கே ஒளித்து வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனால், இந்த அத்திவரதரைக்கூட கீழே பூமியில் புதைத்து மறைத்து வைத்துள்ளார்கள். இப்போது நமக்கு அந்த பயம் இல்லை.
இந்த மூர்த்தி.. மிகவும் பேசும் மூர்த்தி. அதனால், கோடிக்கணக்கான மக்கள் பார்ப்பதற்கு வந்துகொண்டே இருப்பார்கள். அதனால், அவரைப் பாதுகாக்க வேண்டுமென்று அடியேனும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.