
சேலத்தில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் மற்றும் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக எஸ்ஐ உள்ளிட்ட இருவரை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.
குட்கா, பான்மசாலா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருள் பட்டியலில் உள்ள புகையிலை பொருள்கள் விற்பனையை அரசு தடை செய்துள்ளது. எனினும், பெங்களூருவில் இருந்து சேலம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தி வந்து விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.
புகையிலை பொருள்களை விற்பனை செய்வோர் மீது சேலம் மாநகர காவல்துறையினர் கைது, குண்டாஸ் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, புகையிலை பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு காவல்துறையில் உள்ள சிலர் உடந்தையாக இருப்பதாக மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின் பேரில், சந்தேகத்திற்குரிய காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிலிருந்ததாக எஸ்ஐக்கள் உள்பட 6 பேர் காவல்நிலையங்களிலிருந்து மாநகர ஆயுதப்படைக்கு ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், செவ்வாய்பேட்டை எஸ்ஐ பாலன், வீராணம் காவலர் வேல் விநாயகம் ஆகியோருக்கும் குட்கா கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அவர்களைப் பற்றிய தனி அறிக்கையும் மாநகர காவல்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகையிலை பொருள் விற்பனை செய்யும் கடைகள் மீது காவல்துறை சோதனைக்கு வருவது குறித்து இவர்கள் இருவரும் கடைக்காரர்களுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்து வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து எஸ்ஐ பாலன், காவலர் வேல் விநாயகம் ஆகிய இருவரும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். போதை கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக மேலும் 25 காவலர்கள் மீது புகார் எழுந்துள்ளது. அவர்கள் குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.
இந்த சம்பவம் சேலம் மாநகர காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.