
எட்டு வருடங்களுக்கு முன், தேசத்தையே உலுக்கிய கோர நிகழ்வு அது. 2012, செப்டம்பர் 5-ஆம் தேதி, சிவகாசியை அடுத்துள்ள ஓம்சக்தி பட்டாசு ஆலை, அப்பட்டமான விதிமீறலுடன் இயங்கியபோது விபத்துக்குள்ளானது. அந்த வெடி விபத்தில் கருகி, 38 பேர் மாண்டு போனார்கள்.
அந்த பட்டாசு ஆலை, அப்போது விருதுநகர் ஒன்றிய அதிமுக கவுன்சிலராக இருந்த முருகேசனுக்குச் சொந்தமானது, அதை அவர் லீசுக்கு விட்டிருந்தார். அந்த வழக்கில் முருகேசனும் உள் குத்தகைதாரர்கள் 11 பேரும் கைதானார்கள். அப்போது, விபத்துக்கு காரணமான விதிமீறல்கள் குறித்து, நக்கீரன் அட்டைப்படக் கட்டுரையே வெளியிட்டது.
காலச்சக்கரம் எப்படியெல்லாம் சுழல்கிறது பாருங்களேன்! அந்த நேரத்தில் பட்டாசு ஆலை உரிமையாளராக இருந்த முருகேசன், தற்போது, விருதுநகர் அருகிலுள்ள நல்லமநாயக்கன்பட்டியில், பிளேவர் பிளாக் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். விருதுநகர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவரான அவர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில், 12-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினரும் ஆவார்.

அந்த தொழிற்சாலையில், தரையில் பதிக்கப்படும் கற்களை உற்பத்தி செய்யும் பணியை மேற்கொள்ளும் மோட்டார், இன்று (6/2/2020) பழுதானது. பழுது பார்த்து முடிந்ததும், மின்னிணைப்பு தந்துள்ளனர். அப்போது மோட்டார் பாகங்கள் முறையாக இணைக்கப்படாத நிலையில், அதிகப்படியான மின்சாரம் பாய்ந்ததன் காரணமாக, மோட்டார் தூக்கி எறியப்பட்டபோது, பழுது பார்த்த முருகேசனின் முகத்தில் பலமாக அடிபட்டிருக்கிறது. அதனால், சம்பவ இடத்திலேயே, அவர் இறந்துபோனார்.
விபத்துகளுக்கு மனித உயிர்களின் மதிப்பு தெரிவதில்லையே!