‘கலக்கல் டிரீம்ஸ்’ பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் கவிஞர் இளையசாகுல் எழுதிய ‘பேசப்பட்டவர்களைப் பேசுகிறேன்’ என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா, சென்னை தி.நகர் தக்கர் பாபா அரங்கில் நடந்தது. நூலை கவிஞர் ஜலாலுதீன் முன்னிலையில் நக்கீரன் தலைமைத் துணை ஆசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் வெளியிட, பிரபல இலங்கைத் தமிழ் எழுத்தாளரான மானா மக்கீன் பெற்றுக்கொண்டார்.
நூலை வெளியிட்டுப் பேசிய ஆரூர் தமிழ்நாடன்... ’சமூக அநீதிக்கு எதிராகக் கொந்தளிக்காதவன் படைப்பாளி ஆகமாட்டான். சமூகத்தைப் பிரதிபலிக்காத எழுத்துக்கள் இலக்கியமாகும் தகுதியையும் பெறாது. இந்த விழாவின் நாயகர் கவிஞர் இளையசாகுல், ஒரு கலகக்காரர். இலக்கிய முரடர். சமூக அநீதிக்கு எதிரான ஆயுதமாகத் தன் பேனாவை சுழற்றுகிறவர். அதனால் அவரைப் பாராட்டுகிறேன். ’முன்பெல்லாம் செத்துபோனவர்கள் ஓட்டுப்போட வருவார்கள். இப்போது அவர்கள் ஆட்சி செய்யவும் வருகிறார்கள். இவர்களால் இப்போது சிம்மாசனம் பாடையாகிவிட்டது’ என்று தன் அரசியல் கோபத்தை தைரியமாக வெளிப்படுத்தினார் கவிக்கோ அப்துல்ரகுமான். அதுபோல் இந்தக் கவிஞர் கண்ணில் படும் அநீதிகளுக்கு எதிராகக் கொந்தளித்துக்கொண்டிருக்கிறார். பாரதி சொன்ன ரெளத்திரத்தை இவரிடம் இன்றைய இலக்கியவாதிகள் பழகவேண்டும். சமூகக் கேடுகளைக் கடுமையாகக் கண்டிக்கும் இந்தக் கவிஞர், பண்பட்ட தலைவர்கள் 46 பேரைப் பற்றி இந்த நூலில் தன் கவிதைகளால் பாட்டுமாலை தொடுத்துப் பாராட்டுகிறார். இவரைப் போன்ற கவிஞர்கள் தமிழுக்குத் தேவை’ என்று பாராட்டினார்.
நூலைப் பெற்றுக்கொண்ட இலங்கை எழுத்தாளர் மானா மக்கீன் ‘இளையசாகுல் அருமையான கவிஞர். இவரை முகநூல் வழியாக அறிவேன். இவர் இந்த நூலின் முன்னுரையில் பின் நவீனத்துவம் என்ற பெயரில் புரியாத கவிதை எழுதுகிறவர்களைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். அவரது இந்த கோபத்தை நான் வழிமொழிகிறேன்’ என்றார் உற்சாகமாக. நூலாசிரியரான கவிஞர் இளையசாகுல் ஏற்புரையாறினார்;
இந்த விழாவில் மேலும் 6 நூல்கள் கலக்கல் டிரிம்ஸ் பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்டன.
-இலக்கியன்