‘வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி?’ என்று கேட்பதுபோல், அருப்புக்கோட்டையை அடுத்துள்ள கஞ்சநாயக்கன்படியில் ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்திருக்கிறது.
ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரான கணேசனுக்கு வயது 80 ஆகிறது. மனைவி இறந்ததால் தனியாக வசிக்கிறார். இதனை நன்கறிந்த ஒரு கும்பல், காரில் வந்து கணேசனின் வீட்டுக்குள் நுழைந்து, அவரைக் கட்டிப்போட்டு, கத்தியைக் காட்டி மிரட்டியது. அவர் வீட்டு பீரோவில் இருந்த ரூ. 4 லட்சத்தையும், 5 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றது.
அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறை ஆய்வாளர் பார்த்திபன், காரியாபட்டி சார்பு ஆய்வாளர் அசோக்குமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையர்களைத் தேடியபோது, கோபி கண்ணன், சம்பத்குமார், மகேஷ் வர்மா, அஜய் சரவணன், அலெக்ஸ் குமார், மூர்த்தி ஆகிய 6 பேர் பிடிபட்டனர்.
கொள்ளையர்களிடமிருந்து ரொக்கம் ரூ. 88 ஆயிரம், 2½ பவுன் நகை மீட்கப்பட்டு விசாரணை நடத்தியபோது, இந்தக் கொள்ளையர்களுக்குக் கொள்ளை நடத்துவதற்கான ‘ஸ்கெட்ச்’ போட்டுக்கொடுத்தவர், முதியவர் கணேசன் வசிக்கும் லட்சுமி நகர் 3வது தெருவிலேயே குடியிருக்கும் தலைமைக் காவலர் இளங்குமரன் என்பது தெரியவந்திருக்கிறது. தலைமறைவான ஏட்டு இளங்குமரனை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தலைமைக் காவலர் இளங்குமரன், தனிமையில் வசிக்கும் முதியவர் கணேசன் வீட்டில் பணமும் நகையும் இருப்பதைத் தெரிந்துகொண்டு, கொள்ளையர்களை அனுப்பி கொள்ளையடிப்பதற்குத் திட்டம் வகுத்துத் தந்திருக்கிறார் என்றால், கொடுமையிலும் கொடுமையாக அல்லவா இருக்கிறது!