தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்குகோரும் சட்டமுன் வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த சட்டமுன் வடிவை ஆளுநர், குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளார். இந்த தகவலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று (06/05/2022) வெளியான முரசொலி நாளிதழில் ஆளுநருக்கு நன்றி தெரிவித்துள்ளக் கட்டுரை இடம் பெற்றுள்ளது. அதில், "ஆளுநர் அவர்களின் செயலாளர் சில மணித்துளிகளுக்கு முன்னால் என்னைத் தொடர்பு கொண்டார். இந்த பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய ‘நீட் விலக்கு மசோதாவை’ குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த தகவலை ஆளுநர் அவர்களின் செயலாளர் எனக்குத் தெரிவித்துள்ளார்” - என்று முதலமைச்சர் சொன்னதும் சபையே அதிர மேசைகள் தட்டி உறுப்பினர்கள் வரவேற்றார்கள்.
'இந்த தகவலுக்காகத் தானே காத்திருந்தோம்' என்பதைப் போல உறுப்பினர்களின் முகங்கள் மலர்ந்தன. "நீட் விளக்கு தொடர்பான நமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்த சட்டமுன் வடிவுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை வைத்து அமைகிறேன்" என்று தனது அடுத்த இலக்கையும், அதே அவையில் முன்மொழிந்து விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்தார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்த நான்காவது மாதம், அதாவது 13/09/2021 அன்று இளநிலை மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வு முறையை விலக்கக் கோரி மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 03/02/2022 அன்று அந்த மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார் மேதகு ஆளுநர்.
இந்த தகவல் கிடைத்த இரண்டாவது நாளே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் கூட்டினார்கள். அக்கூட்டத்தின் முடிவின் படி அதற்கு மூன்று நாள் கழித்து தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடந்தது. அதே மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது. மறுபடியும் ஆளுநருக்கு 08/02/2022 அன்று அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரத் தேவையில்லை. அந்த அதிகாரம் அவரிடம் இல்லை.
தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவை, குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அது ஒன்றுதான் ஆளுநரின் பணியாகும். அதனை அவர் செய்தாக வேண்டும் என்பதற்காக, இந்த 228 நாட்களும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த முயற்சிகள் என்பவை, மிகப்பெரிய தொடர் படையெடுப்பு போல அமைந்திருந்தது. இறுதி இலக்கை அடையும் வரை அதனை விடாமல் வலியுறுத்திக் கொண்டே இருப்பது என்ற முடிவோடு இருந்தார் முதலமைச்சர். அவரது விடாமுயற்சியின் பயன் தான், ஆளுநர் எடுத்த முடிவாகும்.
அந்தத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போனதற்காக, தற்கொலை செய்து கொண்ட மாணவ, மாணவியரின் முகங்கள் நம் மனக்கண் முன் நிழலாடுகின்றன. இவ்வளவுக்குப் பிறகும் இத்தகைய ஒரு தேர்வு தேவையா? என்ற அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் உருவாக்கப்பட்டதுதான் நீட் விலக்கு மசோதா ஆகும்.
இப்போது 'நீட் விலக்கு மசோதாவை' குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்ததன் மூலமாக, ஆளுநரின் இந்த நடவடிக்கை நன்றிக்குரியது. அவருக்கு நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும். ஆளுநர் அவர்களுக்கு நன்றி! என்று குறிப்பிட்டுள்ளது.