சேலம் அருகே, லஞ்ச புகாரில் கைதான அரசுப்பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை செயல்பட்டு வருகிறது. இதில், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளராக குணசேகரன் என்பவர் உள்ளார். இவர், அரசுப் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார்.
தாரமங்கலம் அருகே உள்ள கண்காணிப்பட்டியைச் சேர்ந்த பரமசிவம் என்பவர், இந்தப் பணிமனையில் இருந்து திருவாரூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றுகிறார். இதே வழித்தட பேருந்தில் பரமசிவம் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமானால் தனக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு கொடுக்காவிட்டால் வேறு வழித்தடத்திற்கு மாற்றி விடுவேன் என்றும் குணசேகரன் அவரை மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து பரமசிவம் சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழங்கிய ஆலோசனையின்படி, ஜன. 10ம் தேதியன்று, ரசாயனம் தடவப்பட்ட 5 ரூபாய் நோட்டுகளை பரமசிவம், குணசேகரனிடம் கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் பாய்ந்து சென்று குணசேகரனை கையும் களவுமாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அரசு ஊழியர்களின் நடத்தை விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டதோடு, கைதாகி சிறைக்கு சென்றதால் அவரை பணியிடைநீக்கம் செய்து சேலம் மண்டல போக்குவரத்து மேலாளர் லட்சுமணன் உத்தரவிட்டுள்ளார்.