மதக்கலவரத்தை உருவாக்கும் வகையில் மன்னார்குடி ஜீயர் பேசி வருவதாக திராவிட கழகத்தினர் மற்றும் திமுக வழக்கறிஞர்கள் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது என மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்திருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து பல்வேறு பேச்சுக்கள் எழுந்துள்ளது. அண்மையில் செய்தியாளர்களை சந்தித்திருந்த மன்னார்குடி ஜீயர், ''பட்டண பிரவேசத்தைத் தடுக்கக்கூடிய அருகதை இந்த அரசாங்கத்திற்கும் கிடையாது, எந்த ஒரு இயக்கத்திற்கும் கிடையாது. அது நம்முடைய சிஷ்யர்கள் பண்ணக்கூடிய ஒரு பணி. அதை செய்தே தீருவார்கள். நான் மன்னார்குடி ஜீயராக சொல்கிறேன் இந்த மாதிரி தர்ம துரோகிகளுக்கும், தேச துரோகிகளுக்கும் ஒரு எச்சரிக்கையும் கொடுக்கிறோம். இந்து விரோதமான செயல்கள், இந்து தர்மத்தில் தலையீடு செய்தால் அரசாங்கத்தில் எந்த ஒரு அமைச்சரும், எம்.எல்.ஏவும் நடமாட முடியாது ரோட்டில்''என்றார்.
இந்த பேச்சு வைரலான நிலையில், இது தொடர்பாக திராவிடர் கழகத்தினர் சார்பில் சென்னை டிஜிபி அலுவலகத்திலும், மன்னார்குடி காவல் நிலையத்திலும் புகாரளிக்கப்பட்டுள்ளது. அதில், 'மன்னார்குடி ஜீயர் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிவருவதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல் சென்னை டிஜிபி அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரில், 'மன்னார்குடி ஜீயர் வன்முறையையும், கலவரத்தையும் தூண்டும் வகையில் சட்ட ஒழுங்கையும், பொது ஒழுங்கையும் கெடுக்கும் வகையில் பேசியுள்ளார். பொதுமக்களால் தேர்வுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் வகையில் பேசிய ஜீயர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.