நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று 08/12/2021 பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப் படை சார்பில் அறிவிக்கப்பட்டது. நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது இந்த துயர நிகழ்வு.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடலுக்கு இன்று ராணுவ மரியாதை செலுத்தப்பட இருக்கிறது. குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெறும் இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், முப்படைகளின் தளபதி ஹரிகுமார் (கடற்படை), வி.சவுத்ரி (விமானப்படை), நரவானே (ராணுவம்) மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இன்று காலை ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த இடத்தில் விமானப்படை தளபதி வி.சவுத்ரி நேரில் ஆய்வு செய்தார். அவருடன் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவும் ஆய்வில் ஈடுபட்டார். இந்நிலையில் அந்த ஹெலிகாப்டரில் இருந்த கருப்புப்பெட்டி தற்போது நச்சபுராசத்திரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கருப்பு பெட்டி பெங்களூர் அல்லது டெல்லி கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.