Skip to main content

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு; சிபிஐ விசாரணை கோரி கூடுதல் மனு தாக்கல்

Published on 03/08/2017 | Edited on 03/08/2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு;
சிபிஐ விசாரணை கோரி கூடுதல் மனு தாக்கல்


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது, தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, செங்கோட்டையன், விஜயபாஸ்கர் மற்றும் டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய சென்னை போலீஸாருக்கு உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் வைரகண்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது பணபட்டுவாடா செய்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன் விசாரணையை கண்காணித்து ஆகஸ்ட் 23ல் அறிக்கை தாக்கல் செய்யும் படி சென்னை கிழக்கு இணை ஆணையர் மனோகரனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அபிராமபுரம் காவல்நிலையத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கிறிஞர் வைரகண்ணன் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே காவல்துறை விசாரணை நியாயமாக நடைபெறாது. வருமான வரி துறை அறிக்கையில் மாநில அமைச்சர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் அவர்களின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கில் அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள் அமைச்சர்களின் கீழ் பணியாற்றுவதால் அவர்களுக்கு எதிராக சுதந்திரமாக செயல்பட முடியாது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார்.

- சி.ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்