சிவகங்கை ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூர் மாவட்டம் உமையாள்புரம் அருகே மருதூரில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக்கோரி திருச்சியைச் சேர்ந்த விருமாண்டி என்பவர் பொதுநலவழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் 'மேட்டூர் அணையிலிருந்து வெளியாகும் காவிரி நீர் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பாய்கிறது. காவிரி ஆற்றின் நீரை நம்பி திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் காவிரி நீர் உள்ளது. காவிரி பாயும் இடங்களில் ஏராளமான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. அதேநேரம் காவிரியில் மண்ணெடுப்பது போன்ற காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு சிவகங்கை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கியது. கரூர் மாவட்டம் உமையாள்புரம் மருதூர் பகுதியில் தடுப்பணை கட்டிய பிறகே சிவகங்கை கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை நிறுத்தினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என வாதத்தை வைத்தனர். அதற்கு 'விவசாயிகள் மனிதர்கள் இல்லையா? இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 50 ஆண்டு காலத்தில் உண்பதற்கு அரிசி கிடைக்காது. தமிழகத்தில் பயன்படுத்தப்படும் அரிசி பெரும்பாலும் மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடக உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வாங்கப்படுகிறது. அவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறோம்' என வேதனை தெரிவித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வாரிய துணைச் செயலாளர் பதிலளிக்கவும், சிவகங்கை ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடையும் விதித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.