Skip to main content

‘நம்மவர்’ நல்லவரா? அரசியலிலும் நடிப்பா? -கமல் மீது பாயும் சந்தேகக் கணைகள்! 

Published on 19/05/2018 | Edited on 19/05/2018
v k

 

விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்ல பார்வையாளர் பதிவேட்டில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் எழுதிய குறிப்பு இது -  
‘கல்லா மேதை இல்லத்தில் கல்லா ரசிகன் கமல்ஹாசன்’


‘காமராஜரைப் போலவே நானும் படிக்கவில்லை;  அவர் போலவே அரசியல் தலைவராகி இருக்கிறேன்’ என்ற எண்ண ஓட்டத்தில்,  கமல்ஹாசன் இப்படி எழுதியிருப்பாரோ என்னவோ?  


எந்தத் தலைவரின் சாயலும் இல்லாமல், அரசியல் தளத்தில் தன்னை வேறுபடுத்திக் காட்டி வருகிறார் கமல்ஹாசன்.  அவரது நடவடிக்கைகளும் வித்தியாசமாகவே இருக்கின்றன.  

 

sk


மாலை நேர மழையைப் பொருட்படுத்தாது சிவகாசி பேருந்து நிலையத்துக்கு அருகில் சிலர் திரண்டிருந்தனர். தனது சுற்றுப்பயணத்தின் ஒரு  ‘பாய்ண்ட்’ என்பதால், தூறல் விழுந்த நிலையிலும் அங்கு வந்தார் கமல்ஹாசன். நிறைய பேசுவார் என்று எதிர்பார்த்தது கூட்டம். அவரோ ஒரு நிமிடம்கூட பேசவில்லை.

 

அந்தப் பேச்சிலும் “நமது கொண்டாட்டங்களோ, கோலாட்டங்களோ, எதார்த்த வாழ்க்கைக்கு இடைஞ்சல் இல்லாமல், மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நடக்க வேண்டும். இங்கே போக்குவரத்துக்கு இடையூறாக நின்றுகொண்டிருக்கின்றீர்கள். நமக்கு கடமை இருக்கிறது. இங்கே சாலையில் நம்மைக் கடந்து செல்பவர்கள், அவரவர் வேலையையும் கடமையையும் செய்வதற்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இடையூறாக மக்கள் நீதி மய்யம் இருக்கக்கூடாது. அதனால், உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.” என்று பேசிவிட்டுக் கிளம்பினார். 


தேசபந்து மைதானம் நிரம்பி வழிந்தது. மற்ற அரசியல் தலைவர்கள் என்றால்,   ‘ஆஹா.. இவ்வளவு கூட்டம் இருக்கிறதே! நீண்ட நேரம் பேசி, மக்கவிருதுநகரில் ளை ஈர்த்து, வாக்குகள் ஆக்கிவிடுவோம்!’ என்றுதான் கணக்கு போட்டிருப்பார்கள். கமல்ஹாசனோ, சரியாக 8 நிமிடங்கள் மட்டுமே பேசினார். கூட்டத்தினருக்கோ ஏமாற்றம். “நல்லா பேசுவாருன்னு பார்த்தா.. சட்டுபுட்டுன்னு பேசிட்டு கிளம்பிட்டாரே!” என்று புலம்பினார்கள். அந்தப் பேச்சிலும் “வேறு கட்சிகளில் இருந்து வந்தால் வரவேற்போம். ஆனால், அப்படி வருபவர்களின் வாழ்க்கை முற்றிலும் நேர்மையாக மாறிவிடும். அதற்கு நீங்கள் தயாரா?” என்று கேள்வி எழுப்பினார். 

 

valli


அரசியலில் இறங்கியபிறகு,  கமல்ஹாசனின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துவரும் வள்ளிநாயகம் என்பவர், “பிரபல நடிகரான கமல்ஹாசன்,   வாகனத்தை சாலையில் நிறுத்தி  மைக் பிடித்தால்,  போக்குவரத்துக்கு  இடையூறு ஏற்படத்தான் செய்யும்.

 

ரசிகர்களோ, வேறு கட்சிகளிலிருந்து  வருபவர்களோ,  பொதுநலத்தை மட்டுமே மனதில் நிறுத்தி, மக்கள் நீதி மய்யத்தின் அரசியலை முன்னெடுத்துச் செல்வார்கள் என்று அவர் எதிர்பார்ப்பது, இந்தக் காலக்கட்டத்தில் சாத்தியப்படுமா?     இதுபோன்ற சிந்தனைகள், யதார்த்தத்தை மீறியதாக அல்லவா இருக்கிறது?  தனக்காகக் கூடிய ரசிகர்களுக்காகவோ, மக்களுக்காகவோ பேசாமல்,  தன்னுடைய பேச்சைக் கண்டுகொள்ளாமல், தனது வாகனத்தைக் கடந்து செல்பவர்கள் மீதல்லவா கரிசனம் காட்டிப் பேசுகிறார். அவ்வளவு நல்லவரா கமல்ஹாசன்? அல்லது,  ‘முன்னால் நின்று தன்னைப் பார்க்கும்  கூட்டம் எப்படியும் தனக்கு வாக்களித்துவிடும். தன்னைப் பொருட்படுத்தாதவர்களையும் பேச்சினால், செயலினால் கவர்வது மட்டுமே, அரசியலில் நிலைத்து நிற்க உதவும்.’ என்று அரசியல் கணக்கு போடுகிறாரா? தேர்ந்த நடிகர் அவர். கற்ற வித்தையை மக்களிடமே காட்டுகிறாரா?” என்று தனது சந்தேகத்தை முன்வைத்தார். 

 

vv


கமல்ஹாசனின் தீவிர ரசிகரான கனியோ, “37 வருடங்களுக்கு முன்பே, வித்தியாசமாகத்தான் சிந்தித்தார் தலைவர்.  பொதுவாக,  தங்களின்  100-வது படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்று திட்டமிடுவார்கள் பெரிய நடிகர்கள். எல்லா வகையிலும் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் கதையாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடுவார்கள். தலைவர் அப்படி கிடையாது. பார்வையற்ற கதாபாத்திரத்தை ஏற்று, ராஜபார்வை என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டார். நல்லதொரு கலைப்படைப்பாக ராஜபார்வை  இருக்க வேண்டும் என்பதில்தான் அவருக்கு அக்கறை இருந்தது. தயாரிப்பாளர் என்ற முறையில்,  வசூலைக் குவிக்கும் கமர்சியல் படமாக அது இருக்க வேண்டும் என்று திட்டமிடவில்லை. 18 வருடங்களுக்கு முன், அவர் தயாரித்து, இயக்கி நடித்த ஹேராமும் கலைப்படம்தான். கல்லா கட்டும் மசாலா படம் கிடையாது. குணா, அன்பே சிவம் என்று தலைவரின் பல படங்களை உதாரணம் காட்ட முடியும்.  சினிமாவில் மட்டுமல்ல. அரசியலிலும் அதே மாறுபட்ட சிந்தனையோடுதான் களம் இறங்கியிருக்கிறார். நல்லவரா? கெட்டவரா? என்று தலைவர் பேசிய வசனத்தையே,  அவருக்கு எதிராக யாரும் ரிபீட் செய்ய வேண்டாம். நல்லதொரு அரசியல் கொள்கையை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் தலைவர் இறங்கியிருக்கிறார். சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.” என்றார். 

‘நம்மவர்’ அரசியலில் ‘நல்லவர்’ என்றால், மக்கள் நிச்சயமாக வரவேற்பார்கள்!
 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Case against For the Congress candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “விருதுநகர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவரின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை வினியோகித்தனர். எனவே மாணிக்கம் தாகூரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (22.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர்களே இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். இது சம்பந்தமாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மேலும் விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story

வாக்காளர் அட்டை இங்கே! என் ஓட்டு எங்கே? - வாக்காளர் ஆத்திரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Sivakasi, voter panic due to inability to vote
சாந்தி - சங்கரன்

தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்களில், ஒரு கோடியே 74லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை. மொத்தத்தில், அதி முக்கிய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றாத வாக்காளர்கள் 28 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் யார் யாருக்கு என்னென்ன  கஷ்டமான சூழ்நிலையோ தெரியவில்லை. ஆனாலும், வாக்களிக்கும் முக்கியத்துவத்தை உணராமல், சோம்பேறித்தனமாக வீட்டிலோ, அலட்சியமாக வெளியூர்களிலோ இருந்தவர்கள், அனேகம் பேர்.

சிவகாசியில் வாக்குச்சாவடி ஒன்றிலிருந்து நம்மை அழைத்த சங்கரன், தன்னையும் தன் மனைவி சாந்தியையும் வாக்களிக்க அனுமதிக்காததால், கொதித்துபோய்ப் பேசினார்.  “இத்தனை வருடங்களாக ஓட்டு போட்டுட்டு இருக்கேன். வாக்காளர் அடையாள அட்டை எங்ககிட்ட இருந்தும், இந்தத்தேர்தல்ல உங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொன்னா, இது அக்கிரமம் இல்லியா? இதெல்லாம் எப்படி நடக்குது? ரொம்பக் கொடுமையா இருக்கு. எங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்லி, அங்கேயிருந்த சிவகாசி மாநகராட்சி அலுவலர்களைப் பார்க்கச் சொன்னாங்க.

 Sivakasi, voter panic due to inability to vote

மூணு மாசத்துக்கு முன்னால லிஸ்ட்லசெக் பண்ணும்போது எங்க பேரு இருந்துச்சுன்னு நான் சொன்னேன். லிஸ்ட்ல உங்க பேரு இல்ல. போன் நம்பர் தப்பா இருக்குன்னாங்க. அப்புறம் இன்டர்நெட்ல EPIC நம்பரை போட்டுப் பார்த்து, எலக்‌ஷன் கமிஷன்ல என் பேரு இருக்கிறத காமிச்சதும், அப்படியான்னு சொல்லி, ஓட்டு போடவிட்டாங்க. ஆனா..என் வீட்டுக்காரம்மா சாந்திக்கு ஓட்டு இல்லைன்னு சாதிச்சிட்டாங்க. அவங்க ரொம்பவும் மனசு வேதனைப்பட்டு, நூறு சதவீதம் வாக்களிப்போம்னு போர்டு வைக்கிறாங்க. ஆனா.. ஓட்டு போட வந்தவங்களுக்கு ஓட்டு இல்லைங்கிறாங்க. அப்படின்னா.. நான் வச்சிருக்கிற வாக்காளர் அடையாள அட்டைக்கு என்ன மதிப்புன்னு மொதல்ல சத்தம் போட்டாங்க. அப்புறம் அழுதுட்டாங்க.” என்றார் ஆதங்கத்துடன்.

 Sivakasi, voter panic due to inability to vote

இதே சிவகாசியில், சிவகாசி மாநகராட்சியின் முதலாவது வார்டு திமுக கவுன்சிலர் செல்வத்தின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. சென்னை சாலிகிராமத்தில் வாக்களிக்கச் சென்ற நடிகர் சூரியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவராலும் வாக்களிக்க முடியாமல் போனது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்களிக்க வராத கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப்போன சாந்தி, நடிகர்சூரி போன்றோரும் நிறையப்பேர் இருக்கிறார்கள். வாக்களிப்பதில் உள்ள குறைபாடுகளுக்குத் தீர்வுகாண முடியாத நிலையில் உள்ளது டிஜிட்டல் இந்தியா என்று கடுமையாக சாடுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.