கடலூர் மாவட்டம், விருத்தாசலம் திரு.வி.க. நகரைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் அருண்தாமரை. இவரது தந்தை பழனிக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைரஸ் தொற்றால் பழனி உயிரிழந்துள்ளார். இதனால் இவரது சொத்துக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
தனது தந்தையின் சொத்திற்கான சிட்டாவை, விருத்தாச்சலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஆவண காப்பகத் துறை அலுவலர் சிவக்குமாரிடம் கேட்டுள்ளார். இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சிவக்குமார், சிட்டா வழங்குவதற்காக ரூ. 1,500 லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததன் அடிப்படையில், அருண்தாமரை ஆவண காப்பகத் துறை ஊழியர் சிவக்குமாரிடம் லஞ்சமாக பணம் கொடுக்கும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக சிவக்குமாரை பிடித்து கைது செய்தனர்.
இச்சம்பவத்தால் விருத்தாச்சலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் விருத்தாச்சலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பல்வேறு வகையில் கையூட்டு பெற்றுக்கொண்டு முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.