மத்திய அரசின் தொல்லியல் துறை பட்டயப்படிப்புக்கான அறிவிப்பில் செம்மொழியான தமிழ்மொழி புறக்கணிப்புக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று (09/10/2020) நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிர்ப்புக்குரல் எழுந்தால் தான் தமிழ் சேர்க்கப்படுமா? தொல்லியல்துறை அறிவிப்பில் செம்மொழியான தமிழ் மொழி ஏன் முதலிலேயே சேர்க்கப்படவில்லை? மொழிகள் உணர்வோடு தொடர்புடையவை. செம்மொழியான தமிழைத் தவிர்த்து தொல்லியல் பட்டயப்படிப்புக்கான அறிவிப்பை வெளியிட்ட அதிகாரி யார்? அறிவிப்பு வெளியிட்ட அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எந்த அடிப்படையில் பாலி, பாரசீக மொழிகள் தொல்லியல்துறை அறிவிப்பில் சேர்க்கப்பட்டது? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட பழமையான மொழிகள் பற்றி அக்டோபர் 28- ஆம் தேதிக்குள் தொல்லியல்துறை பதிலளிக்க உத்தரவிட்டனர்.
இதனிடையே, மத்திய தொல்லியல்துறை பட்டயப்படிப்பில் செம்மொழிகளான தமிழ், கன்னடம், மலையாளம், பாலி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளை சேர்த்து புதிய அறிவிப்பை மத்திய அரசின் தொல்லியல் துறை இன்று காலை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.