கடந்த ஆட்சி காலத்தில் பள்ளிகளிலும் தொல்லியல் சார்ந்த தொன்மை பாதுகாப்பு மன்றங்களை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுப் பள்ளிகளில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தொல்லியல் மன்றங்களை உருவாக்கியதுடன் மாணவர்களுக்கும் பயிற்சிகள் கொடுத்து வந்தனர். தொடர்ந்து பயிற்சி அளித்து வருகின்றனர்.
இன்று சர்வதே தொல்லியல் நாள்..

இந்த நாளில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் மாணவர்களால் கடந்த பல வருடங்களாக சேகரிக்கப்பட்ட தொல் பொருட்களின் கண்காட்சி சர்வதேச தொல்லியல் தினத்தை கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டது.
இந்த கண்காட்சியை பள்ளித் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு.ராசேந்திரன் கலந்து கொண்டார்.

கண்காட்சியில் கந்தர்வக்கோட்டை அருகே அரவம்பட்டி ஊராட்சி பகுதிக்குட்பட்ட இச்சடியம்மன் கோவில் திடலில் விரவிக் கிடக்கும் கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், கருப்பு நிற ரௌலட் பானைத்தாங்கி உள்ளிட்டவைகளோடு தொன்மை பாதுகாப்பு மன்றத்தால் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் பானைக்குறியீடுகள், ஓலைச்சுவடிகள், கல்வெட்டு படிகள், தொண்டைமான் காலத்தை சேர்ந்த பாட புத்தகங்கள், மரத்தாலான காலணி, செப்பு கலயங்கள், பழங்கால மை எழுதுகோல், தொண்டைமான், பிரிட்டிஷ் நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் உதவித்தலைமை ஆசிரியர்கள் குமரவேல், சோமசுந்தரம், ஆசிரியர்கள், மாணவர்கள் பார்த்தனர். தொல்லியல் ஆய்வாளரும் ஆசிரியருமான மங்கனூர் ஆ.மணிகண்டன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார். ஆய்வாளர் கரு.ராஜேந்திரன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தொல்பொருட்களை பற்றி மாணவர்களுக்கு விளக்கினார்.

இன்று சர்வதேச தொல்லியல் தினம் என்றாலும் இப்போது எல்லோர் மனதில் நிற்பது கீழடி. தமிழ் சமூகம் எவ்வளவு பழமையான எழுத்தறிவு பெற்ற சமூகம் என்பதை சில பானை ஓடுகளில் இருந்து எழுத்துகள் உலகிற்கு காட்டிவிட்டது. அவற்றைப் பார்க்கும்போது எங்களுக்கும் பெருமையாக உள்ளது. அதாவது நாங்களும் எந்த இடத்தில் வித்தியாசமான பொருட்கள் கிடந்தாலும் எடுத்து வந்து சேகரிக்கிறோம். எங்கள் சேகரிப்புகளும் ஒரு நாள் பேசப்படும் என்றனர்.