தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களை தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்து வருகிறது. கிராம நிர்வாக அதிகாரி முதல் துணை ஆட்சியர் வரை இந்த தேர்வின் மூலம் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வில் ஆரம்பித்து நேர்காணல் வரை பல முறைகளில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக சில ஆண்டுகளாகத் தேர்வுகளை தேர்வாணையம் நடத்தாமல் இருந்து வந்தது. தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் தேர்வு நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
இந்நிலையில், குரூப்-2 தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி வரும் மே மாதம் 21ம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து, இன்று முதல் இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது.