தொண்டி அருகே அரசு மதுக்கடை கட்ட
கிராம மக்கள் எதிர்ப்பு- ஆர்ப்பாட்டம்
திருவாடானை அருகே அரசு மதுக்கடை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மதுக்கடை கட்டுவதை நிறுத்திவிட்டு அதிகாரிகள் சென்றனர்.
திருவாடானை தாலுகா, தொண்டி அருகே நரிக்குடி கிராமத்தில் புதிதாக அரசு மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்யும் விதமாக தனியார் இடத்தில் மதுக்கடை கட்டப்பட்டு வந்த நிலையில் தகவலறிந்த அந்த கிராம மக்கள் 20க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒன்று திரண்டு புதிதாக கட்டப்பட்டு வரும் மதுக்கடைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தைக்குப் பின் அனைவரும் கலைந்து சென்றார்கள்.
இது குறித்து நரிக்குடி கிராமத்தை சேர்ந்த பானுமதி கூறுகையில், இப்பகுதியில் ஏற்கனவே மதுக்கடை இருந்தது. இந்த கடையால் பல்வேறு பிரச்சனைகள் நடந்தன. இப்பகுதி வழியாக பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ,மாணவிகள் மீது மதுபோதையில் இருப்பவர்கள் தண்ணீர் பாக்கெட்டுகளை வீசுவது, ஆபாசமாக பேசுவது போன்ற காரணத்தினால் பல்வேறு போராட்டம் நடைபெற்றது. பிறகு கடை அகற்றப்பட்டது. இப்போது மீண்டும் அதிகாரிகள் அந்தக்கடை திறப்பதற்கு முயற்சி செய்கின்றனர். அதனால் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என்றார்.
- பாலாஜி