அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்திவருகிறார்கள். கடந்த சில மாதங்களாக ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்திவருகிறார்கள். அந்த வகையில், கோவையில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கரூரில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீடுகளில் ஏற்கனவே சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், இன்று (16.09.2021) காலை 7 மணி அளவில் முன்னாள் வணிக வரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். தமிழ்நாட்டில் 28 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இந்த சோதனையில் பங்கேற்றுள்ளார்கள். இதில், சென்னை சாந்தோம் லீத்கேஸ்டில் உள்ள கே.சி. வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்துவருகின்றனர். அதேபோல், சூளைமேடு கில் நகரில் சிவானந்தா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் கே.சி. வீரமணியின் உறவினர் வீட்டில் ரெய்டு நடப்பதாக தகவல். ஆனால் வீடு பூட்டியுள்ளதால் அதிகாரிகள் யாரும் இன்னும் வரவில்லை. இரண்டு போலீசார் மட்டும் வெளியே காவல் இருக்கின்றனர்.