முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக இருந்தவர் மீது மீண்டும் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்துள்ள நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, அவருக்கு நேர்முக உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பல கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, அவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, மணியும், அவரது கூட்டாளியுமான செல்வக்குமாரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்த நிலையில், சேலத்தில் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள், மணி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வருகின்றனர். அ.தி.மு.க. நிர்வாகியான கிஷோர் என்பவர், மாவட்ட காவல்துறை துணை ஆணையர் மாடசாமியிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இது குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.