அரசு அலட்சியப்படுத்தினால் மாணவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் போராட்டத்தில் இறங்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தையே வசூலிக்கக் கோரி, கடந்த 46 நாட்களாகப் பெற்றோர்களும் மாணவர்களும் போராடி வருகிறார்கள்.
மாணவர்கள் விடுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. முதலமைச்சர். துணை முதலமைச்சர் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு இது தொடர்பாக மாணவர்கள் மனு அளித்தும் கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது என்று மாணவர்கள் வேதனைப்படுகிறார்கள்.
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாகக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோரும் போராடுவதில் நூறு சதவிகிதம் நியாயம் இருக்கிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடந்த 2013- ஆம் ஆண்டு முதல், தமிழக உயர் கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அரசால் நிர்வகிக்கப்படும் இந்த கல்லூரியில், அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தைவிட, 30 மடங்கு அதிகமாக இருக்கிறது. தனியார் சுயநிதிக் கல்லூரிகளைவிட 3 மடங்கு அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த 2013 முதல் 2020- ஆம் ஆண்டு வரை, ரூபாய் 2 ஆயிரம் கோடி வரை மானியம் மற்றும் நிதியாகத் தமிழக உயர் கல்வித்துறை வழங்கியுள்ளது. மற்ற அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் மற்றும் உதவியை விட, இது 45 முதல் 50 சதவிகிதம் அதிகமாகும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் முறைகேடுகள் நடப்பதைத் தமிழக அரசு கண்டுபிடித்தது. இதனையடுத்து, பழைய நிர்வாகம் முற்றிலும் கலைக்கப்பட்டு, உயர் கல்வித்துறை அமைச்சர் சார்பு வேந்தராக நியமிக்கப்பட்டார்.
இந்த மருத்துவக் கல்லூரி 1929- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து 2013- ஆம் ஆண்டு வரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு ரூபாய் 4 ஆயிரம் கோடி வரை அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், 2013 முதல் 2021- ஆம் ஆண்டு வரை, ரூபாய் 2 ஆயிரம் கோடி வரை மானியம் வழங்கப்பட்டுள்ளது.
அரசின் உதவியுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இயங்கிய போதிலும், பல்கலைக்கழகத்துக்கு ஆகும் செலவில், 10-ல் ஒரு பங்கு மாணவர்களிடம் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தேர்வுக் கட்டணமாக மாணவர்களிடம் ரூபாய் 1 லட்சம் வரை வசூலித்தபோதும், தேர்வுக் கட்டணத்துக்கு ஆகும் செலவில், 11 இல் 1 மடங்கு மாணவர்களிடமிருந்தே வசூலிக்கப்படுகிறது.
அரசிடமிருந்து ரூபாய் 2 ஆயிரத்து 500 கோடி வரை மானியம் பெற்ற போதிலும், கல்விச் செலவுக்காக 10 இல் ஒரு பங்குத் தொகையை மட்டுமே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஒதுக்குகிறது. ஒட்டுமொத்த தொகையையும் பயன்படுத்திக் கொள்ளாமல், மொத்த செலவையும் மாணவர்கள் கல்விக் கட்டணத்திலிருந்து ஈடுசெய்வது எந்த வகையில் நியாயம்?
அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு 13,600 ரூபாயும், எம்.டி./எம்.எஸ். படிப்புக்கு ரூபாய் 30 ஆயிரமும், பல் மருத்துவ இளங்கலைப் படிப்புக்கு 11,610 ரூபாயும், பல் மருத்துவ முதுகலைப் படிப்புக்கு ரூபாய் 30 ஆயிரமும் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும், எம்.டி/எம்.எஸ் படிப்புக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், பல் மருத்துவ இளங்கலைப் படிப்புக்கு ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரமும், பல் மருத்துவ முதுகலைப் படிப்புக்கு ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரமும் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதேசமயம், அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மட்டும், எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ரூபாய் 5 லட்சத்து 60 ஆயிரமும், எம்.டி./எம்.எஸ். படிப்புக்கு 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும், பல் மருத்துவ இளங்கலைப் படிப்புக்கு ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரமும், பல் மருத்துவ முதுகலைப் படிப்புக்கு ரூபாய் 7 லட்சத்து 8 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கட்டண நிர்ணயம் நியாயமற்றது, பாரபட்சமானது. மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண அளவையே, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும் நிர்ணயிப்பது தான் சரியானதாக இருக்கும்.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளில் பெரும்பாலோர் ஏழ்மையான மற்றும் நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். கல்விக்கடன் பெற்றே இவர்கள் இங்கு படிக்கிறார்கள். இந்தக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவித்த போதிலும், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளை விடக் கல்விக் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த அநீதியை எதிர்த்துத் தான் கடந்த 46 நாட்களாக மாணவர்களும் பெற்றோர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கடந்த 20- ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தையும் அவர்கள் தொடர்ந்துள்ளனர். அவர்களது கோரிக்கையை மனசாட்சியுடன் பரிசீலித்து உடனடியாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தையே, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும் நிர்ணயிக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த கோரிக்கையை அரசு அலட்சியப்படுத்துமேயானால், அவர்களுக்குத் தோள் கொடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் போராட்டக் களத்தில் குதிக்கும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவிக்க விரும்புகின்றேன்'. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.