சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கருணை அடிப்படையில் 34 பேர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பணி நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தூய்மைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மிகவும் சொற்ப வருமானத்தில் செய்து வருகிறார்கள். இவர்களை 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. சட்டப்படி இவர்களை ஒரு வருடத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால் நிர்வாகம் ஒவ்வொரு வருடமும் இவர்களைப் பணி நிரந்தரம் செய்யப்படும் என ஏமாற்றி வந்துள்ளது.
இதனால் 10 ஆண்டுகள் பொறுத்திருந்த இந்த ஊழியர்கள் தற்போது இறுதியாக அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசனை சந்தித்து மனு கொடுப்பதற்காக சென்றனர். துணைவேந்தர் பல்வேறு பணிகள் உள்ளதால் அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார். இதனால் வேதனை அடைந்த ஊழியர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: “கடந்த 10 ஆண்டுகளாக மாதம் ரூபாய் 1,200 இல் இருந்து தற்போது 3,200 கூலி வாங்கிக்கொண்டு பணி செய்து வருகிறோம்.
கடந்த 10 ஆண்டுகளாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஆனால் ‘இந்த ஆண்டு செய்கிறோம், இந்த ஆண்டு செய்கிறோம்’ என நிர்வாகம் எங்களைத் தொடர்ந்து அலைக்கழித்து வருகிறது. நாங்கள் கணவன், அப்பா உள்ளிட்ட உறவினர்களை இழந்து இந்தப் பணி நியமனத்தை பெற்றுள்ளோம். ஆனால் நிர்வாகம் எங்களின் உழைப்பை மிகவும் சொற்ப வருமானத்தில் வாங்கிக்கொண்டு எங்களின் வாழ்வாதாரத்தைக் கண்டுகொள்ளவில்லை. இனிமேலும் தாமதப்படுத்தினால் துணைவேந்தர் அலுவலகத்தில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று உருக்கமாக கண்ணீர் மல்க கூறினார்கள்.