
தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளராக எஸ்.ஜி. சூர்யா இருந்து வருகிறார். கட்சியின் முக்கிய நிர்வாகியான இவர் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவதூறு வழக்கில் மதுரை சைபர் கிரைம் போலீசார், டி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் எஸ்.ஜி. சூர்யாவின் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள்.
விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க் கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது. கருத்து சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இதுபோல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு. பாஜக தொண்டர்களை, இதுபோன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக் கொண்டிருக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.