சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரைக் கடந்த 25ஆம் தேதி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி இன்று (28.12.2024) ஆய்வு மேற்கொண்டார். ஆளுநருடன், உயர்கல்வித்துறை செயலாளர், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், ‘பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. அண்ணா பல்கலைககழக ஆசிரியர் சங்கத்தின் சார்பில் உள்ள வழக்கறிஞர்கள், இந்த சட்டப்போராட்டத்தில் துணை நிற்பார்கள். மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் குப்பைகளை அகற்றப்பட்டு வருகிறது. , பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒவ்வொரு மின்விளக்குகளும் இரவு நேரத்தில் முழுமையாக எரிவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் இல்லாதது பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. கடினமான முடிவுகளை எடுப்பதற்கு மூத்த பேராசிரியர் ஒருவர், துணை வேந்தராக இல்லாதது வருத்தமளிக்கிறது. எனவே, அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மூத்த பேராசிரியர் ஒருவரை தற்காலிக துணைவேந்தராக நியமனம் செய்ய வேண்டும். வெளிநபர்கள் நடைபயிற்சிக்காக அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும். காலையில் நடைபயிற்சிக்கு வருவோருக்கு கட்டண பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நுழைவாயில்களில் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். வளாகத்தில், 24 மணி நேரமும் ஊழியர்கள் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.