தமிழ்நாட்டின் பிரதான பல்கலைக்கழகமான சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று (1-ம் தேதி) மாணவர் பேரவை தேர்தலுக்கான ஆன்லைன் வாக்குப்பதிவு நடந்தது. இதில் மாணவர்கள் தரப்பில் இரு அணிகள் போட்டியிட்டனர். அதன் முடிவு மாலை 6 மணிக்கு வெளியானது.
இதில் EEE 4-ம் ஆண்டு படிக்கும் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஆதித்ராய் மாணவர் பேரவை தலைவர் தேர்தலில் 20 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் சக மாணவ மாணவிகள் வாழ்த்துகளைக் கூறினார்கள்.
மாணவர் தலைவராக வெற்றி பெற்ற ஆதித்ராய் குளச்சல் தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. இரா.பொ்னார்டுவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. பொ்னார்டு கலைஞரோடு நெருக்கமாக இருந்ததோடு திமுக மாநில மீனவரணி செயலாளராக பல ஆண்டுகளாக பொறுப்பில் இருந்தவர். தற்போது சில தினங்களுக்கு முன் முதல்வா் ஸ்டாலினால் மாநில மீனவரணி தலைவராக பொ்னார்டு நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலில் தாத்தாவுக்கு புதிய பதவி கிடைத்த ஓரிரு நாளில் பேரன் புகழ்வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவா் பேரவை தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டது அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மாணவா் ஆதித்ராயின் தந்தை தமிழ் இனியன், தமிழக அரசின் செய்தித்துறை இணை இயக்குநராக உள்ளார். அவரின் சித்தப்பா வட சென்னை மாவட்ட திமுக மீனவரணி அமைப்பாளராக உள்ளார். விரைவில் முதல்வா் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற இருப்பதாக மாணவா் ஆதித்ராய் கூறியுள்ளார்.