ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தும்படி, அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
கரோனா ஊரடங்கு காரணமாக, இறுதி பருவத் தேர்வு தவிர, பிற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான கட்டணங்களைச் செலுத்தும்படி, அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே, இவ்வழக்கில் மாணவர்கள் தரப்பில் வாதங்கள் முடிந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
அண்ணா பல்கலைக்கழகத் தரப்பு வழக்கறிஞர், “விடைத்தாள் திருத்தப்பணி தவிர, மற்ற பணிகளுக்கான செலவுகள் மேற்கொள்ளப்பட்டது. நியாயமான கட்டணமே வசூலிக்கப்பட்டுள்ளது. வசூலித்த கட்டணத்தை திருப்பிக் கொடுப்பது அனுமதிக்கத்தக்கதல்ல என டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. கட்டணத்தை திருப்பி கொடுக்க உத்தரவிட்டால், அது தவறான முன்னுதாரணமாகிவிடும். வழக்கு தொடர்ந்துள்ள மாணவர்களின் பின்னணியில் கல்லூரிகள் உள்ளன. கல்லூரிகள், தங்களை வளப்படுத்திக் கொள்கின்றன. விடைத்தாள் திருத்தப்பணி உள்ளிட்ட தேர்வுக்கு பிந்தைய செலவுகளுக்காக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள், பல்கலைக்கழக நலனுக்கு பயன்படுத்தப்படும்” என்று வாதிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.