தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊழியர்களை மிரட்டும், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரியான பூங்கோதையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதனை அடுத்து அங்கன்வாடி ஊழியர்கள் உதவி ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி பூங்கோதை இடமாற்றம் செய்யப்படவில்லை அதைத் தொடர்ந்துதான் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாலை அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரி பூங்கோதையை இடமாற்றம் செய்யக் கோரி கோஷம் போட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவி தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார்.
இதில் மாநில பொதுச்செயலாளர் டெய்சி, தலைவர் ரத்தினமாலா, இணைச்செயலாளர் சித்திரைச்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சம்பந்தப்பட்ட அதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டும். இல்லையென்றால் மாவட்டம் மட்டுமல்ல மாநில அளவில் போராட்டம் வெடிக்கும். மேலும், பழுதடைந்த அங்கன்வாடி கட்டடங்களைச் சரிசெய்ய வேண்டும். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் உதவியாளர்களுக்குப் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷமிட்டனர். அதன்பின்னர் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆடசியரிடம் மனு கொடுத்தனர்.